×

தொடர் மழை பெய்து வருவதால் தண்ணீரில் மூழ்கிய மிளகாய் வெங்காயம், மல்லி பயிர்கள்: கவலையில் விவசாயிகள்

 

சாயல்குடி, நவ.28: உச்சிநத்தம் பகுதியில் பெய்து வரும் தொடர்மழைக்கு மிளகாய், மல்லி, வெங்காயம், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் 60 சதவீத கண்மாய், குளம், பண்ணை குட்டை போன்ற நீர்நிலைகள் நிறைந்து காணப்படுகிறது. ஆறுகள், ஓடைகள்,வரத்து கால்வாய்களில் பெருக்கெடுத்து ஓடி வரும் காட்டாறு வெள்ளத்திற்கு பயிர்கள் மூழ்கி வருகிறது.

சாயல்குடி அருகே கொக்கரசன்கோட்டை, கொண்டுநல்லான்பட்டி, வாலம்பட்டி, உச்சிநத்தம், முத்துராமலிங்கபுரம், வெள்ளையாபுரம், பிச்சையாபுரம், டி.கரிசல்குளம், டி.எம்.கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் ராமநாதபுரம், தூத்துக்குடி கடைசி எல்லையில் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழைக்கு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் ஒன்றியத்தை சேர்ந்த லட்சுமிபுரம், மாவிலோடை பகுதிகளிலிருந்து நீர்வழித் தடங்களில் தண்ணீர் நிரம்பி அது வெளியேறி காட்டாறு வெள்ளமாக வந்தது.

உச்சிநத்தம், வி.சேதுராஜபுரம், கொண்டுநல்லான்பட்டி உள்ளிட்ட இப்பகுதியிலுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள கரிசல் மண் விவசாய நிலத்தில் மிளகாய், மல்லி பயிரிடுவது வழக்கம். பருவ மழையை எதிர்பார்த்து கடந்த மாதங்களில் விவசாய நிலத்தில் உழவார பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்து கிடப்பதால் சுமார் 1000 ஏக்கரில் நன்றாக விளைந்த நிலையிலிருந்த மிளகாய், மல்லி, உளுந்து மற்றும் ஊடுபயிராக விளைவிக்கப்பட்டிருந்த வெங்காயம் போன்ற பயிர்கள் அழுகி வருகிறது.

இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை செய்ய முடியாமல் கவலை அடைந்துள்ளனர். இரண்டாவது முறையாக மறுபடியும் உழவார பணிகளை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதால், இரட்டிப்பு செலவு ஆகும் என்பதால் அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தொடர் மழை பெய்து வருவதால் தண்ணீரில் மூழ்கிய மிளகாய் வெங்காயம், மல்லி பயிர்கள்: கவலையில் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Sayalgudi ,Uchinantham ,Dinakaran ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம்