×

சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங் முழு உருவ சிலை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்; அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52.20 லட்சம் செலவில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முழுஉருவ சிலையை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் வி.பி.சிங் துணைவியார், மகன் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், சென்னையில் அவருக்கு முழு உருவ சிலை அமைக்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், 110வது விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் வி.பி.சிங்குக்கு முழு உருவ கம்பீர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை நேற்று காலை 11 மணிக்கு உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், அவரது மனைவியும் அக்கட்சியின் எம்பியுமான டிம்பிள் யாதவ், வி.பி.சிங்கின் மனைவி சீதா குமாரி, மகன் அஜயா சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அப்போது அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினர். அதைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்தரமோகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் மோகன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வி.பி.சிங் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிறந்தார். உத்தரபிரதேச மாநில முதல்வராகவும், மத்திய வர்த்தக அமைச்சராகவும், வெளியுறவு துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்பு துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தவர். பின்னர் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி, 1989ம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் ஆனார். வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது பல்வேறு சாதனைகள் செய்துள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசு பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற மண்டல் கமிஷனின் பரிந்துரையை அமல்படுத்தியவர் வி.பி.சிங்.

எனவே, நாடு முழுவதும் அரசியல் தலைவர்களாலும், மக்களாலும் வி.பி.சிங் பெரிதும் மதிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, காவிரி நதிநீர் பிரச்னைக்கு தீர்ப்பாயம் அமைத்து தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் மீது எப்போதும் அதிக அக்கறை கொண்டவர் வி.பி.சிங். அப்போதைய முதல்வர் கலைஞருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். முக்கியமான முடிவுகளை கலைஞரிடம் ஆலோசனை நடத்திய பின்னர் அமுல்படுத்தி வந்தவர். தான் எடுத்த முடிவுகளில் இருந்து பின்வாங்காதவர். அதற்காக ஆட்சியை இழந்தவர். இப்படி பல பெருமைகளுக்கு சொந்தக்காரருக்கு சென்னையில் சிலை வைக்கப்பட்டதற்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்தும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

* பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசு பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தியவர் வி.பி.சிங்.
* பிரதமராக இருந்தபோது, காவிரி நதிநீர் பிரச்னைக்கு தீர்ப்பாயம் அமைத்து தந்தார்.
* தமிழகத்தின் மீது எப்போதும் அதிக அக்கறை கொண்டவர் வி.பி.சிங்.

The post சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங் முழு உருவ சிலை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்; அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chennai State College Campus ,Singh ,M. K. Stalin ,Akilesh Yadav ,Chennai ,Former ,V.V. B. ,Chennai State College Campus V. B. ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...