×

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும்

சென்னை: வங்கக் கடலில் அந்தமான் அருகே ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 2 நாட்களில் புயலாகவும் மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்று சுழற்சி உருவானது. அது மேலும் வலுப்பெறத் தொடங்கி, 27ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டது. அதன் காரணமாக வட தமிழகத்தில் பல இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 100 மிமீ மழை பெய்துள்ளது. சென்னை, கும்மிடிப்பூண்டி 60மிமீ, மீனம்பாக்கம், போளூர், சோழவரம்50மிமீ, மரக்காணம், கலவை, அடையாறு, சோழிங்கநல்லூர், காட்டுப்பாக்கம் 50மிமீ மழை பெய்துள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே கணித்தபடி தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த வளிமண்டல காற்று சுழற்சி மேலும் வலுப்பெற்று அந்தமான் மற்றும் அதைஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது.

இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறும், அடுத்த 2 நாளில் அது புயலாகமாறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழ்நாட்டில் டிசம்பர் 3ம் தேதி வரை மழை நீடிக்கும். மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்று வீசும். நாளை தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

* புதிய புயலுக்கு பெயர்-‘மிக் ஜாம்’
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று 29ம் தேதியில் புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் வட கிழக்கு பருவ மழை காலத்தில் உருவாகும் புயல்களுக்கு 12 நாடுகள் பெயர் சூட்டுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டில் வங்கக் கடலில் தற்போது 29ம் தேதி புயல் உருவாகும் பட்சத்தில் அந்த புயலுக்கு ‘மிக்ஜாம்’(mic chaumg) என்று பெயரிட்டபட்டுள்ளது. இந்த பெயரை மியான்மர் சூட்டியுள்ளது.

The post வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும் appeared first on Dinakaran.

Tags : Andaman ,Bay of Bengal ,Chennai ,Dinakaran ,
× RELATED மீன்பிடி தடைக்காலம் எதிரொலி...