×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மின்னணு ஆதாரங்களை விரைந்து வழங்க வேண்டும்: கோவை ஆய்வகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

ஊட்டி: கொடநாடு கொலை வழக்கு விசாரணை தொடர்பான மின்னணு ஆதாரங்களை விரைந்து அளிக்க கோவை ஆய்வகத்துக்கு ஊட்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்க்கு சொந்தமாக எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் குட்டி ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டியில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தனிப்படை போலீசார் 316 பேரிடம் மறு விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கை சிபிஐசிடி போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு கடந்த 24ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ஷாஜகான், கூடுதல் எஸ்பி முருகவேல் ஆகியோர், ‘பிஜின்குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் 8 செல்போன்கள் மற்றும் 4 சிம்கார்டுகளில் இருந்த தகவல் பரிமாற்ற விவரங்களை கோவை ஆய்வகத்தில் இருந்து விரைந்து பெற்று தர வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் செல்போனில் சேகரிக்கப்பட்டுள்ள மின்னணு ஆதாரங்களை விரைந்து அனுப்புமாறு கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதுதொடர்பாக கடிதம் அனுப்பி உள்ளது. இந்த கடிதம் இன்று ஆய்வகத்திற்கு கிடைத்ததும் ஒரு சில நாட்களில் மின்னணு தகவல் பரிமாற்ற ஆதாரங்கள் நீதிமன்றத்திற்கு கிடைக்கும் என்றும், அதன் பின்னர் இந்த ஆதாரங்கள் கோவை சிபிசிஐடி அலுவலகத்திற்கு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மின்னணு ஆதாரங்களை விரைந்து வழங்க வேண்டும்: கோவை ஆய்வகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kodanad ,Coimbatore laboratory ,Ooty ,Koda ,Nadu ,Koda Nadu ,Dinakaran ,
× RELATED நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி...