×

2,668 அடி உயர திருவண்ணாமலை உச்சியில் இருந்து 40 கி.மீ. தூரம் காட்சியளிக்கும் மகா தீபம்: விடிய விடிய எரிய தினமும் 400 கிலோ நெய்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம், 40 கி.மீ. சுற்றளவு வரை காட்சியளிக்கிறது. திருவண்ணாமலையில் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக நடந்த கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் 10ம் நாளான நேற்று முன்தினம், 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. வரலாறு காணாத அளவில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் மகா தீபத்தின் போது தங்க விமானங்களில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகள், கோயிலில் இருந்து புறப்பாடாகி, மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நள்ளிரவு தொடங்கிய மாடவீதி வலம் விடிய விடிய நடந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் நிறைவடைந்ததை தொடர்ந்து, 3 நாட்கள் ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடப்பது வழக்கம்.

அதன்படி, முதல் நாளான நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் சந்திரசேகரர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை தீபத்திருவிழா ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட பழமையும், பெருமையும் மிக்கது. ஆரம்ப காலங்களில் 3 நாட்கள் மட்டுமே மலை மீது மகாதீபம் பிரகாசித்தது. பின்னர், காலப்போக்கில் 7 நாட்கள், 9 நாட்கள் என நீட்டிக்கப்பட்டு, தற்போது 11 நாட்கள் மகாதீபம் மலை மீது ஏற்றப்படுகிறது. தீபத்திருவிழாவின்போது, மலைமீது ஏற்றப்படும் மகாதீபம் தொடர்ச்சியாக 11 நாட்கள் சுடர்விடும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு.

ஆனால், அது உண்மையல்ல. ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு தீபம் மலை மீது ஏற்றப்படும். 2,668 அடி உயரம் கொண்ட திருவண்ணாமலை மலை மீது ஏற்றப்படும் தீபம், சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றளவு வரை காட்சியளிப்பது அதன் சிறப்பு அம்சமாகும். இடையில் எந்தவித இடையூறும் இல்லாவிட்டால் 40 கி.மீ. சுற்றளவில் உள்ள பக்தர்கள் மகாதீபத்தை தரிசிக்கலாம். அதற்காக, தினமும் சுமார் 400 கிலோ நெய், திரி, கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. அவற்றை, தினமும் கோயிலில் இருந்து முறையாக பூஜை செய்யப்பட்டு மலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தினமும் மாலை 6 மணிக்கு மலைமீது ஏற்றப்படும் தீபம் விடிய, விடிய சுடர்விட்டு காட்சிதரும். அதிகாலையில் தீபத்திற்கு நெய் ஊற்றுவது படிப்படியாக குறைப்பதன் மூலம் தானாக சுடர்விடுதல் நின்றுவிடும். தீபகொப்பரையின் சூடு தணிந்ததும், மீண்டும் அதில் திரி, நெய் நிரப்பும் பணி மேற்கொள்ளப்பட்டு, மாலை 6 மணிக்கு மீண்டும் ஏற்றப்படுவது மரபு. தீபம் ஏற்றும் திருப்பணியை தொன்றுதொட்டு தீப நாட்டார் என அழைக்கப்படும் பர்வதராஜகுலத்தினர் நிறைவேற்றி வருகின்றனர். மீனவ குலத்தில் அவதரித்தவர் பார்வதிதேவி. அவரது தந்தையான பர்வதராஜாவுக்கு சிவபெருமான் அளித்த வாக்குறுதியின்படியே தீபம் ஏற்றும் உரிமையை பெற்றனர் என்பது இதன் பின்னணியில் உள்ள சுவையான ஆன்மிக தகவலாகும்.

* சிறப்பான முன்னேற்பாடு: அரசுக்கு குவியும் பாராட்டு
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா, இதுவரை எப்போதும் இல்லாமல் இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடந்து முடிந்தது. அதையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகள் முறையாக திட்டமிடப்பட்டு கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தன. தீபத்திருவிழாவை தரிசிக்க வரும் பக்தர்களுக்கான அனைத்து வசதிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அமைச்சர்கள் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளும் சிறப்பாக ஒருங்கிணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, எஸ்.எஸ்.சிவசங்கர் நேரடியாக களத்தில் இறங்கி ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினர். உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண், வடக்கு மண்டல ஐஜி கண்ணன் மேற்பார்வையில் இதுவரை எப்போதும் இல்லாத அளவில், 14 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போக்குவரத்து சிக்கல் ஏற்படாமல் தடுக்க பிரதான சாலைகளில் 500க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தனர்.

போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்களால் இந்தாண்டு திருட்டு, செயின் பறிப்பு போன்ற குற்றங்களும் குறிப்பிடும்படியாக நடைபெறவில்லை. ஒரு பெண் பக்தரிடம் 4 சவரன் செயின் அபகரித்தாகவும், 32 பேரின் செல்போன் காணவில்லை என்றும் புகார் பதிவாகியுள்ளது. மலை மீது ஆண்டுதோறும் எதிர்பாராமல் தீவிபத்து ஏற்படுவது உண்டு. ஆனால், இந்த ஆண்டு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை பணிகளால், மலையில் தீவிபத்து ஏற்படுவது முற்றிலுமாக தவிர்க்கப்பட்டது. அதேபோல், 2700 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அதேபோல், தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து இலவசமாக நகருக்குள் வர வசதியாக 250 மினி பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும், 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. எனவே, பக்தர்களுக்கு இவை பெரிதும் உதவியாக அமைந்தது. இவ்வாறு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த தமிழ்நாடு அரசுக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.

* 65 ஆயிரம் குழந்தைகள் கிரிவலம்
கிரிவலம் செல்லும் கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போவதை தவிர்க்க, 65 ஆயிரம் குழந்தைகளின் கைகளில் பெற்றோரின் செல்போன் எண் முகவரியுடன் கூடிய ரிஸ்ட் பேண்ட் கட்டப்பட்டன. அதனால், இந்த ஆண்டு குழந்தை காணவில்லை என ஒரு புகாரும் பதிவாகவில்லை.

The post 2,668 அடி உயர திருவண்ணாமலை உச்சியில் இருந்து 40 கி.மீ. தூரம் காட்சியளிக்கும் மகா தீபம்: விடிய விடிய எரிய தினமும் 400 கிலோ நெய் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Thiruvannamalai ,Karthigai Deepa Ceremony ,Maha ,
× RELATED சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே...