ஆவடி: லாரி டிரைவரை தாக்கிப் பணம் பறிக்க முயன்ற வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் (31). லாரி ஓட்டுனரான இவர் கடந்த 25ம் தேதி கும்மிடிப்பூண்டியில் இருந்து கேரளாவை சேர்ந்த கிளீனர் ரமேஷ் (26) என்பவருடன் பிளைவுட் ஏற்றிக் கொண்டு சென்றார். வேப்பம்பட்டு பகுதியில் அதனை இறக்கிவிட்டு மீண்டும் கும்மிடிப்பூண்டிக்குச் சென்றபோது நெமிலிச்சேரி, பாலவேடு டோல்கேட் அருகே நள்ளிரவில் லாரியை நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள், வாசுதேவன் மற்றும் ரமேசுடன் தகராறில் ஈடுபட்டு, கையால் தாக்கி பணம் பறிக்க முயன்றனர். இதில், வாசுதேவன் சுதாரித்துக் கொண்டு அருகில் இருந்த இரும்பு கம்பியால், மர்ம நபர்களை தற்காப்புக்காக தலையில் தாக்கினார். இதைக் கண்ட மற்ற 2 நபர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். ஒருவனை மட்டும் பிடித்தனர். அப்போது டோல்கேட்டில் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் குணசேகரனிடம் பிடிபட்ட ஆசாமியை ஒப்படைத்தனர். பின்னர், முத்தாபுதுப்பேட்டை காவல் நிலைய போலீசாரிடம் அந்த நபரை ஒப்படைத்தனர்.
இதில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்றுமுன்தினம் ஆவடி பஜார் நகர் பகுதியைச் சேர்ந்த வில்சன் (28) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும், இருவரை தீவிரமாக தேடி வந்தனர். அவர்கள் திருநின்றவூர் லட்சுமிபுரம் 4வது தெருவை சேர்ந்த அஜித்குமார் (19) மற்றும் திருநின்றவூர் சுதேசி நகர் பகுதியைச் சேர்ந்த கவுதமன் (21) ஆகியோர் என்பது தெரிய வந்தது. நேற்று இருவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது appeared first on Dinakaran.
