×

உழவு, களையெடுப்பு, அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு நவீன இயந்திரத்துக்கு மாறிவரும் திருத்தணி சுற்று வட்டார விவசாயிகள்: மானிய விலையில் கிடைப்பதால் உற்சாகம்

திருத்தணி: திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் உழவு, களையெடுப்பு, அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு நவீன இயந்திர பயன்பாட்டுக்கு விவசாயிகள் மாறி வருகின்றனர். இந்த இயந்திரங்கள் மானிய விலையில் கிடைப்பதால் அவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். திருத்தணி மற்றும் திருவலாங்காடு ஒன்றியங்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியுள்ளனர். இங்குள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் நெல், வேர்க்கடலை, கரும்பு, கம்பு, எள்ளு, கேழ்வரகு, சோளம், பூச்செடிகள், மா, கொய்யா, சப்போட்டா போன்றவற்றை சாகுபடி செய்கின்றனர்.

உற்பத்தி பொருட்களை சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். விவசாய பணிகளுக்கு கடந்த காலங்களில் ஆண், பெண் என இரு பாலரும் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். அதேபோன்று கால்நடைகளும் இந்த விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. கடந்த 10 ஆண்டு காலமாக விவசாய பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு மன உளைச்சலுக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாயிகள் நவீன முறையில் விவசாயம் செய்வதற்கு இறங்கி உள்ளனர். இதில் முதலில் மாடுகளைக் கொண்டு உழவு செய்யப்பட்ட விவசாய நிலங்களை மாற்றி, டிராக்டர்கள் உழவு கலப்பை மூலம் உழவு செய்து சீர்படுத்துகின்றனர். இதனால் கால்நடைகள் விவசாய பணியில் ஈடுபடுத்தப்படுவது வெகுவாக குறைந்துவிட்டது. நெல் பயிரிடுவதற்கு ரொட்டவேட்டர் என்ற உழவு கலப்பு மூலம் சேடையாக மாற்றப்பட்டு, அதன் பின்னர் நவீன முறையில் நாற்று நடும் இயந்திரங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் விவசாயக் கூலி தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுவது படிப்படியாக குறைந்து வந்தது.

அதே நேரத்தில் விவசாயம் செய்கின்ற விவசாயிகளுக்கும் கால நேரம் குறைந்தது. குறுகிய நேரத்தில் நடவு செய்யும் பணியும் முடிவடையும். இந்த முறையை விவசாயிகள் பெரிதும் வரவேற்றுள்ளனர். இதேபோன்று இரண்டு மணி நேரத்தில் அறுவடை இயந்திரங்கள் மூலம் நெல் மணிகளை அறுவடை செய்து, விரைவாக தங்கள் விவசாய நிலத்தில் இருந்து நெல்மணிகளை களத்து மேட்டுக்கு கொண்டு வருகின்றனர். இதில் கூடுதல் செலவு ஆனாலும் காலதாமதம் இன்றி, தங்கள் உற்பத்தி பொருட்களை உரிய நேரத்தில் வெளியே கொண்டு வருகின்றனர் விவசாயிகள்.

அதே நேரத்தில் நெல் நடவு செய்யும்போது வரப்புகளை சீர் செய்து அதனை உயர்த்தும் பணிக்கு ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் இரண்டு முதல் நான்கு பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தனர். இதற்காக ஒவ்வொருவருக்கும் கூலியாக ரூ.400 மற்றும் 2 வேளை உணவு வழங்க வேண்டும். அப்படி வழங்கினாலும் இந்த பணிக்கு தற்போது ஆட்கள் கிடைப்பதில் பெரும் சிரமமாக இருந்து வருகிறது. ஒரு சில விவசாயிகள் தாங்களே விவசாய நிலங்களில் இறங்கி வரப்புகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு விடுகின்றனர். பலர் ஆட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

தற்போது வரப்புகளை சீரமைக்கும் பணிகளுக்கு டிராக்டர் மூலம் நவீன கருவி ஒரு வரப் பிரசாதமாக விவசாயிகளுக்கு வந்துள்ளது. தற்போது இந்த கருவி செய்யும் பணியைக் கண்டு விவசாயிகள் ஆச்சரியத்தில் அசந்து போய் உள்ளனர். தற்போது இந்த டிராக்டர்களை கொண்டு தங்கள் விவசாய நிலத்தில் உள்ள வரப்புகளை சீர் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த டிராக்டருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2,200 என்று நிர்ணயம் செய்து வரப்புப் பணிகள் சீரமைக்கும் பணியில் விவசாயிகள் வாடகை செலுத்தி பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

தற்போது ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இந்த டிராக்டர் வந்திருப்பது விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோன்று பூச்செடி அருகில் களை எடுப்பதற்காக தற்போது அதற்கும் ஒரு சிறிய அளவிலான டிராக்டரை வேளாண்மைத் துறையினர் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர். தற்போது பூச்செடி மற்றும் மா, பலா, கொய்யா போன்ற தோட்ட பயிர்களின் நடுவே களை எடுப்பதற்காக இந்த சிறிய வகை டிராக்டர்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நவீன இயந்திரங்கள் விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post உழவு, களையெடுப்பு, அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கு நவீன இயந்திரத்துக்கு மாறிவரும் திருத்தணி சுற்று வட்டார விவசாயிகள்: மானிய விலையில் கிடைப்பதால் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,
× RELATED 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி