×

விவசாயிகளுக்கு ஆதரவாக மேலூரில் கடையடைப்பு போராட்டம்: முக்கிய வீதிகள் வெறிச்சோடின

மேலூர்: ஒரு போக பாசனத்திற்கு பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, மேலூரில் கடையடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இதனால், நகரில் முக்கிய வீதிகள் வெறிச்சோடின. தேனி மாவட்டத்தில் பெய்த பருவமழையால் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.35 அடியாகவும், நீர்வரத்து 1451 கனஅடியாகவும், தமிழகத்திற்கு நீர்வெளியேற்றம் 1,000 கனஅடியாகவும் தற்போது உள்ளது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால், அணையிலிருந்து மதுரை மாவட்டம், மேலூர் பகுதி ஒரு போக பாசனத்திற்கு தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை வலியுறுத்தி, மேலூர் யூனியன் அலுவலகம் முன்பிருந்து இன்று ஊர்வலமாக சென்று பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்திருந்திருந்தனர்.

மேலூரில் கடையடைப்பு போராட்டம்

இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக ஆதரவாக மேலூரில் வணிகர் சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதில் வணிகர்கள் முன்னேற்ற சங்கம், நகை கடை நலச் சங்கம், ரைஸ் பிளவர் மில் சங்கம், ஜவுளி, ரெடிமேட் சங்கம், விவசாய இடு பொருள் வியாபாரிகள் சங்கம், தினசரி மார்க்கெட், காய்கறி வியாபாரிகள் சங்கம், பாத்திரக்கடை சங்கம் உட்பட அனைத்து சங்கத்தினரும் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள், தெருக்கள் வெறிச்சோடின. இந்நிலையில், முற்றுகை போராட்டத்துக்காக காலை முதல் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் குவிந்து வருகின்றனர். இதனால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post விவசாயிகளுக்கு ஆதரவாக மேலூரில் கடையடைப்பு போராட்டம்: முக்கிய வீதிகள் வெறிச்சோடின appeared first on Dinakaran.

Tags : Mellur ,Melur ,Periyar dam ,Dinakaran ,
× RELATED மேலூர் அருகே திருவாதவூரில் மீன்பிடி திருவிழா..!!