×

நிமோனியா தடுக்க… தவிர்க்க!

நன்றி குங்குமம் டாக்டர்

உலகளவில் ஆண்டுதோறும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிமோனியாவால் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவை பொருத்தவரை, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 2 நிமிடத்துக்கு ஒரு குழந்தை நிமோனியாவால் மரணமடைவதாக இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதனால், நிமோனியா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தவே ஆண்டுதோறும் நவம்பர் 12ஆம் தேதி உலக நிமோனியா தினமாக அனுசரிக்கப்பட்டுவருகிறது. நிமோனியா குறித்து அறிவோம் தற்காத்துக்கொள்வோம்.

நிமோனியா என்பது என்ன?

நுரையீரல் திசுகளில் ஏற்படும் அழற்சியே (வீக்கம்) நிமோனியா என்று சொல்லப்படுகிறது. இந்நோயால் நுரையீரலின் காற்றுப்பைகள் பாதிக்கப்படுகின்றன. அதாவது, நாம் காற்றை சுவாசிக்கும்போது காற்றில் கலந்திருக்கும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற நோய் பரப்பும் கிருமிகள், நுரையீரலைத் தாக்கி நிமோனியாவை ஏற்படுத்துகின்றன. பொதுவாக பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியாதான் பரவலாக காணப்படுகிறது. வைரல் நிமோனியா சமீபகாலமாக கோவிட் வைரஸூடன் தொடர்புடையதாக இருக்கிறது. இதைத் தவிர, பூஞ்சைகளால் ஏற்படும் நிமோனியா குறைந்தளவிலேயே காணப்படுகிறது. பூஞ்சையால் ஏற்படும் நிமோனியா, ஒருவரது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து விட்டாலோ அல்லது எச்.ஐ.வி. பாதிப்பு அல்லது அதிகளவிலான கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோய் போன்றவற்றால் வருகிறது.

வகைகள்

நிமோனியாவின் வகைகள் இவ்வளவுதான் என்று சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அது பரந்து விரிந்துள்ளது. உதாரணமாக பாக்டீரியா நிமோனியா என்று எடுத்தால், ஆயிரக்கணக்கான பாக்டீரியாக்கள் இருக்கின்றன. அதில் எதில் வேண்டுமானாலும் நிமோனியா வரலாம். அதுபோன்று வைரஸிலும் ஏராளமான வைரஸ் இருக்கிறது. அதிலும் எதில் வேண்டுமானாலும் நிமோனியா வரலாம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், பாக்டீரியல், வைரல், ஃபங்கல், ஏடிபிகல் என்று நான்கு வகைகளாக பிரிக்கலாம்.

அறிகுறிகள்

பொதுவாக நுண்ணுயிரிகளின் வகை மற்றும் உடல்நிலையை பொருத்து நிமோனியா அறிகுறிகள் காணலாம். இது இருமல், குளிர் காய்ச்சல், நடுக்கம், கை, கால் விரல்களில் நீலம் கோர்ப்பது, வேகமாக மூச்சுவாங்குதல், மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு அதிகளவு வியர்வை வெளியேறுதல், உதடுகள் வெளிறிப்போதல் அல்லது நீலம்பூத்தல், நெஞ்சுவலி, பசியின்மை உடல் சோர்வு அதிகப்படியான இதயத் துடிப்பு போன்றவை நிமோனியாவின் அறிகுறிகளாகும்.

நிமோனியாவின் தாக்கம்

நிமோனியா ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதைக் கடந்தவர்களையுமே அதிகம் பாதிக்கிறது. அதாவது, உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்தால் நிமோனியா வர வாய்ப்புகள் அதிகம். சர்க்கரைநோய், புகைபிடிப்பது மற்றும் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், ஆஸ்துமா, உள்ளிட்ட நெஞ்சுச் சளி பிரச்னை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், புற்றுநோய்க்கு எடுத்துக்கொள்ளப்படும் ஸ்டிராய்ட்ஸ் மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களை நிமோனியா தாக்குவதற்கு வாய்ப்புண்டு. மேலும், நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோயினால் அவதிப்படுபவர்கள் 90 சதவிகிதம் இந்த நோயினால் தாக்கப்படலாம். அதுபோன்று எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களையும் நிமோனியா தாக்கலாம்.

சிகிச்சைகள்

முதலில் எந்த வகையான நிமோனியா என்பது கண்டறியப்பட்டு அதற்குத் தகுந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. உதாரணமாக, பாக்டீரியில் நிமோனியா என்றால், ஆன்டிபயாடிக் கொடுக்கப்படும். வைரல் நிமோனியாவாக இருந்தால் அதற்குத் தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்படும். நிமோனியா தீவிரமாக இருந்தால், வென்டிலேட்டர் கொடுக்கப்படும். அதன்பிறகு நுரையீரல் எந்தளவு பாதித்துள்ளது என்பதை சிடி ஸ்கேன் மூலம் கண்டறியப்படும். இது தவிர, பரான்ஸ்கோ ஸ்கோபி என்ற சோதனை மேற்கொள்ளப்படும், இது நுரையீரலுக்குள்ளே டியூப்பை செலுத்தி அதன்மூலம் சளி எடுத்து சோதனை செய்யப்படும் பரிசோதனையாகும். நோய் அதி தீவிரமாக இருக்கிறது என்றால் எக்கோ எடுத்து பார்க்கப்படும்.

தடுப்புமுறைகள்

நிமோனியாவை தடுப்பூசி மூலம் தடுக்க இயலும். இது பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் இருக்கிறது. பிறந்த குழந்தைகளுக்கு சரியான கால அளவில் நிமோனியா தடுப்பு ஊசி கட்டாயம் போடவேண்டும். ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு நிமோகாக்கல் தடுப்பூசி இருக்கிறது. இது வாழ்நாளில் ஒரேயொரு முறை போட்டுக்கொண்டால் போதும். இந்த தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது.

முதியவர்களுக்கு இத்தகைய தடுப்பூசி போட்டுக்கொள்வதால், அவர்களுடைய குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நிமோனியா பாதிப்பு வருவது தடுக்கப்படுகிறது. சாதாரணமாக காய்ச்சல் குழந்தைகளுக்கு வந்தால்கூட, அலட்சியப் படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சளி மற்றும் இருமல் இருக்கும்போது, குழந்தைகளைக் கொஞ்சவோ, முத்தம் கொடுக்கவோ கூடாது. தும்மும்போதும் இருமும்போதும் கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சுத்தம் பேணிவந்தால் நிமோனியாவை வரவிடாமல் தடுக்கலாம்.

தொகுப்பு: தவநிதி

The post நிமோனியா தடுக்க… தவிர்க்க! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,Dinakaran ,
× RELATED உங்க பாப்பா பள்ளி செல்ல மறுக்கிறதா? காரணம் இதோ…