×

கார்த்திகை தீப திருவிழாவால் வேலூர் மீன் மார்க்கெட்டில் விற்பனை மந்தம்

*மழையின் காரணமாக வரத்து குறைந்தது

வேலூர் : கார்த்திகை தீப திருவிழாவால் வேலூர் மீன் மார்க்கெட்டில் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் 80க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.

நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 70 முதல் 100 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை சில்லறை விற்பனை நடக்கிறது.

இந்நிலையில் கார்த்திகை மாதம் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல விரதம் தொடங்கி உள்ளதால் விற்பனையும் சற்று குறைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று கார்த்திகை தீப திருவிழாவால் மீன்கள் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் வரத்து குறைந்ததால் இந்த விலை சற்றே அதிகரித்துள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: கேரளா மற்றும் தென்மாவட்டங்களில் மழை காரணமாக மீன்வரத்து குறைந்துள்ளது. கடந்த வாரம் 3 லோடுகள் வந்த மீன்கள். இந்த வாரம் 2 லோடுகள் மட்டுமே வந்துள்ளது. இருப்பினும் கார்த்திகை மாதம் பிறப்பால் மீன்கள் விற்பனை மந்தமான நிலையில் தான் உள்ளது. இன்றைய கார்த்திகை மாத தீப விழா காரணமாக நேற்று மார்க்கெட் வெறிச்சோடியது. மீன்களை வாங்க மிகவும் குறைந்த அளவிலான அசைவ பிரியர்கள் வந்தனர்.

கடந்த வாரத்தைவிட மீன்களின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.900 முதல் கிலோ ரூ.600 வரையும் விற்றது. இறால் கிலோ ரூ.300 முதல் ₹400 வரையும், நண்டு கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையும் விற்றது. கட்லா கிலோ ரூ.160 முதல் ₹200 வரையும், சங்கரா கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரையும், ஜிலேபி கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரையும், ஷீலா கிலோ ரூ.300 வரையும், அயிலா ரூ.150, மத்தி ரூ.140 முதல் ரூ.160 வரை, கடல் வவ்வால் கிலோ ரூ.500, ஏரி, குளங்களில் வளரும் வவ்வால் கிலோ ரூ.160 முதல் ரூ.180 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கார்த்திகை தீப திருவிழாவால் வேலூர் மீன் மார்க்கெட்டில் விற்பனை மந்தம் appeared first on Dinakaran.

Tags : Karthika Deepa festival ,Vellore ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...