×

கலசபாக்கம் அருகே தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயர பர்வத மலையில் மகாதீபம் ஏற்றம்

*கொட்டும் பனி, மழையிலும் விடிய விடிய பக்தர்கள் தரிசனம்

*நட்சத்திர கிரியில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம்

கலசபாக்கம் : கலசபாக்கம் அருகே தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயர பர்வத மலையில் நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது, கொட்டு பனி, மழையிலும் விடிய விடிய பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் 4.560 அடி உயரத்தில் உள்ள பர்வத மலையில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மல்லிகா அர்ஜுனேஸ்வரர் பிரம்மராம்பிகை அம்பாள் கோயில் உள்ளது. தென் கைலாயம் என அழைக்கப்படும் இம்மலையை நந்தி மலை, பர்வதமலை என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர்.

பல்வேறு சிறப்புமிக்க அதிசய மலையாக திகழும் இம்மலையில் சித்தர்கள் இன்றும் வாழ்கின்றனர். பலருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள். இம்மலைக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். தற்போது அனைத்து நாட்களிலும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.நேற்று கார்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை மகாதீபம் ஏற்றிட மேளதாளம் முழங்கிட மகா தீப கொப்பரை, நெய், துணி நாடா உள்ளிட்ட பொருட்களை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பூஜை செய்து ஏராளமானோர் வழிபட்டனர். இதில் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து நெய் காணிக்கை வழங்கி மகா தீபம் ஏற்றிட வழி அனுப்பி வைத்தார்.

அதை தொடர்ந்து, நேற்று மாலை 6 மணி அளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, மூன்று நாட்கள் மகா தீபம் பக்தர்களுக்கு காட்சி தரும். மேலும் கோயில் மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள கரை கண்டேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கடலாடி, பட்டியந்தல், வேடப்புலி, வெள்ளந்தாங்கிஸ்வரர், வடகாளியம்மன் கோயில் வழியாக சுமார் 23 கிலோ மீட்டர் கிரிவலம் வந்தனர்.

பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்கிறார்களா என்பது குறித்து வனத்துறை, காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து மலை ஏறிட அனுமதித்தினர். மலை அடிவாரத்தில் வீரபத்திரன் கோயிலில் பக்தர்களுக்கு மலையேறிச் செல்ல தைரியத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கிட கைகளில் சக்தி கயிறு கட்டப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது.

நேற்று ஞாயிறு கிரிவலம் வந்தால் கடன் தீரும். இன்று பவுர்ணமி நாளில் திங்கட்கிழமை கிரிவலம் வந்தால் பதவி கிட்டும் என்பது ஐதீகம். இதனால் வழக்கத்தை விட பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. கொட்டும் பனியையும், மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள், ‘அரோகரா அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் நீண்ட நேரம் காத்திருந்து விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல், கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில் பகுதியில் நட்சத்திர கிரி மலை மீது அமைந்துள்ள சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று காலை பரணி தீபமும், மாலை மகா தீபமும் ஏற்றப்பட்டது. கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். மேலும் உற்சவமூர்த்திகள் கிரிவலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

செய்யாற்றில் மகா தீபம் ஏற்றிய சிறுவர்கள்

கலசபாக்கம் அடுத்த பழங்கோவில் கிராமத்தில் ஆறாவது ஆண்டாக சிறுவர்கள் ஒன்று கூடி செய்யாற்றில் மணலில் 5அடி உயரத்திற்கு சிவலிங்கத்தை வடிவமைத்து தீபம் ஏற்றி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

The post கலசபாக்கம் அருகே தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் 4,560 அடி உயர பர்வத மலையில் மகாதீபம் ஏற்றம் appeared first on Dinakaran.

Tags : Mahadipam ,South Mahadevangalam ,Kalasapakkam ,Mahadipam Ascent ,Galasapakkam ,
× RELATED 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் இன்று...