×

கரூரில் பரபரப்பு: ஓடும் வேனில் பொறியியல் கல்லூரி மாணவன் கழுத்தை கத்தியால் சகமாணவர் அறுத்ததால் அதிர்ச்சி..!!

கரூர்: குளித்தலை அருகே தனியார் கல்லூரி வாகனத்தில் பொறியியல் மாணவரின் கழுத்தை, எம்.பி.ஏ. மாணவர் திடீரென அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முசுறியை சேர்ந்த பெரியசாமி மகன் நிதிஷ்குமார். இவர் புலியூர் செட்டிநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் இன்ஜினியரிங் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல் தன்னுடைய வாகனத்தில் ஏறி முசுறியில் இருந்து குளித்தலை வழியாக அய்யர்மலை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது தொட்டியத்தை சேர்ந்த அதே கல்லூரியில் படிக்கும் எம்.பி.ஏ. மாணவன் அண்ணாமலை என்பவர் திடீரென தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த சூரி கத்தியால் நிதிஷ்குமாரின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவரின் அலறல் சத்தத்தை கேட்ட வேன் டிரைவர், வாகனத்தை உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்று சிகிச்சைக்காக நிதிஷ்குமாரை அனுமதித்துள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார், அண்ணாமலை என்ற மாணவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிதிஷ்குமார் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், நிதிஷ்குமாரிடம் அண்ணாமலை மிக நெருக்கமாக பழகி வந்துள்ளார். எப்போதும் ஒன்றாகவே இருவரும் கல்லூரி வேனில் அமர்ந்து சென்று வந்துள்ளனர். ஒருகட்டத்தில் தன்னுடன் நெருங்கி பழகி வருவதை நிதிஷ்குமார் வெறுத்து அண்ணாமலையிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிதிஷ்குமார் தன்னுடன் பேசவில்லை எனவும் செல்போனில் பேச மறுப்பதாகவும் கூறி அண்ணாமலை, நிதிஷ்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு நிதிஷ்குமாரின் பெற்றோர் அண்ணாமலையை எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல் கல்லூரி வாகனத்தில் நிதிஷ்குமார் அண்ணாமலை அருகில் அமராமல் தள்ளி சென்று அமர்ந்து வந்ததால் கோபமடைந்த அண்ணாமலை, பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிதிஷ்குமாரின் கழுத்தை அறுத்ததாக தெரியவந்துள்ளது. பொறியியல் மாணவரின் கழுத்தை, எம்.பி.ஏ. மாணவர் திடீரென அறுத்த சம்பவம் திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கரூரில் பரபரப்பு: ஓடும் வேனில் பொறியியல் கல்லூரி மாணவன் கழுத்தை கத்தியால் சகமாணவர் அறுத்ததால் அதிர்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Karur ,Kulithlai ,
× RELATED கரூர், திருச்சி பைபாஸ் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தக்கூடாது