×

பழநியில் பெண் அதிகாரியுடன் தகராறு: இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது வழக்குப்பதிவு

 

பழநி, நவ. 27: பழநியில் பெண் கோயில் அதிகாரியுடன் தகராறில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி உட்பட 3 பேர் மீது அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பழநி கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவார பகுதியில் ஏராளமான தற்காலிக கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி இக்கடைகள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அடிக்கடி அகற்றப்படும். இந்நிலையில் ஆக்கிரமிப்பு கடை எனக்கூறி இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் கடையும் கோயில் ஊழியர்களால் பறிமுதல் செய்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சரவணன் பழநி கோயில் தலைமை அலுவலகத்திற்கு தனது கட்சியினருடன் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்து உதவி ஆணையர் லட்சுமியிடம் தனது ஆதரவாளரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை திரும்ப வழங்குமாறு கூறியதாக தெரிகிறது. அப்போது உதவி ஆணையருக்கும், இந்து மக்கள் கட்சி நிர்வாகிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உதவி ஆணையர் லட்சுமி அடிவாரம் போலீசில் புகார் செய்தார். இவரது புகாரின் அடிப்படையில் போலீசார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் சரவணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேர் என 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பழநியில் பெண் அதிகாரியுடன் தகராறு: இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Palani ,Hindu People's Party ,
× RELATED பழநி நகரில் சுற்றி திரியும் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும்