- திருக்கார்த்திகை தீபத்திரி விஜால கோலகலை
- திண்டுக்கல் மாவட்டம்
- திண்டுக்கல்
- திருக்கார்த்திகை தீப திருவிழா
- திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில்
திண்டுக்கல், நவ. 27: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் திருக்கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் விளக்கேற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர். தங்கள் வீடுகளிலும் திருத்தலங்களிலும் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் வண்ண கோலங்களிட்டு, நட்சத்திர வடிவில் விளக்குகள் ஏற்றப்பட்டு நடுவில் அம்மன் கோலமிடப்பட்டிருந்தது.
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளக்குகள் ஏற்றப்பட்டன. விளக்கேற்றிய பக்தர்கள் தங்கள் வாழ்வில் இருள் அகன்று ஒளி ஏற்பட அம்மனை வழிபட்டு சென்றனர். இதேபோல் திண்டுக்கல் ரெங்கநாதபுரம் மலை மீது அமைந்துள்ள பழமையான அருள்மிகு சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு நேற்று கோவில் வளாகத்தில் சங்கு சக்கரம் தாமரை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலும் ஆலயத்தின் உள்புறம் வெளிப்புற பகுதிகளில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திண்டுக்கல் மேட்டுராஜகாபட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று மாலை சுவாமி புறப்பாடு நடைபெற்று கோவில் முன்பு மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
The post திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கோலாகல கொண்டாட்டம் appeared first on Dinakaran.