×

நாகர்கோவில் மாநகராட்சி பழைய கட்டிடத்தில் 2 மண்டல அலுவலகம் அமைக்கும் பணி தீவிரம்

 

நாகர்கோவில், நவ.27: நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் 52 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் அனைத்தும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கான அலுவலகம் நாகர்கோவில் மாநகராட்சியின் பழைய கட்டிடத்தில் செயல்பட இருக்கிறது. பழைய கட்டிடத்தின் கீழ்தளத்தில் கிழக்கு மண்டல அலுவலகமும், முதல் தளத்தில் வடக்கு மண்டல அலுவலகமும் அமைகிறது. இதற்காக செய்யப்பட வேண்டிய சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன் உத்தரவின் பேரில் இன்ஜினியர் பாலசுப்பிரமணியம் நேற்று ஆய்வு செய்தார்.

அவருடன் வடக்கு மண்டல தலைவர் ஜவகர், கிழக்கு மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி ஆகியோர் உடன் வந்திருந்தனர். மண்டல தலைவர் அலுவலகம், கூட்ட அரங்கம் உள்ளிட்டவை அமைகிறது. என்னென்ன பணிகள் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பாக, மண்டல தலைவர்கள் ஜவகர், அகஸ்டினா கோகிலவாணியுடன் இன்ஜினியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார். இந்த புனரமைப்பு பணிக்காக ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மண்டல அலுவலகம் ஜனவரி மாதத்துக்குள் பணிகள் முடிந்து செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மண்டலத்தில் 13 வார்டுகளும், வடக்கு மண்டலத்தில் 14 வார்டுகளும் உள்ளன. இது தவிர ஏற்கனவே தெற்கு மண்டல அலுவலகம் தெங்கம்புதூர் பழைய பேரூராட்சி அலுவலக கட்டிடத்திலும், மேற்கு மண்டல அலுவலகம் ஆளூர் பேரூராட்சி அலுவலக கட்டிடத்திலும் செயல்பட உள்ளது. மண்டல அலுவலகங்கள் செயல்பாட்டிற்கு வரும்போது அந்தந்த வார்டுகளுக்கு உட்பட்டவர்கள் தங்கள் வார்டு பணிகள் தொடர்பாக மண்டல அலுவலகங்களையே தொடர்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட்ட பின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் தனித்தனியாக உதவி ஆணையர்களும் நியமனம் செய்யப்படுவார்கள்.

The post நாகர்கோவில் மாநகராட்சி பழைய கட்டிடத்தில் 2 மண்டல அலுவலகம் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil Corporation ,Nagercoil ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை