மானாமதுரை, நவ.27: வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மானாமதுரை கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றும், ஆற்றில் இறங்க கூடாது என அரசுத்துறை நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மாவட்ட எல்லையில் இருக்கும் வேதியரேந்தல் மதகு அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் மாவட்ட நிர்வாகத்தால் நேற்றுமுன்தினம் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை,சிவகங்கை மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக கண்மாய்கள் நிரம்பி மாறுகால் பாய்ந்து வருவதால் உபரியாக வெளியேறும் நீர் வைகை ஆற்றை வந்தடைகிறது. ஏற்கனவே அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரும் சேர்ந்துள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் எதிர்பார்த்ததை விட கூடுதலாக நீர் வரத்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை, மானாமதுரை நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மானாமதுரை நகராட்சி சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வருகின்ற ஒன்றாம் தேதி சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக பொதுப்பணித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானாமதுரை நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆனந்த வல்லியம்மன் கோயில் படித்துறை, கிழ்க்கு பகுதியில் சோனையா கோயில் படித்துறை ஆகிய இடங்கள் வழியாக பொதுமக்கள் ஆற்றுக்குள் இறங்காத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளதுடன் ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை சார்பில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பை தடுக்க சவுக்குமரங்கள், மணல் மூட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
The post வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.
