×

குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயிகளுக்கு உணவு வழங்கல்

சிவகங்கை, நவ.27: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் மாதத்தின் இறுதி வெள்ளிக் கிழமைகளில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாதம் ஒரு நாள் மட்டுமே நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தங்களது குறைகளை தெரிவிப்பர்.

இக்கூட்டத்தில் திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், சிங்கம்புணரி, கல்லல், தேவகோட்டை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்வர். கலெக்டர் தலைமையில் நடக்கும் இக்கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கும். பிற்பகல் 2அல்லது 3மணி வரை கூட்டம் நடக்கும் நிலையில் அதன் பிறகு விவசாயிகள் மதிய உணவு இல்லாமல் பாதிக்கப்பட்டனர்.

கூட்டம் முடிந்து சொந்த ஊருக்கு செல்ல மாலை ஆகி விடும் என்பதால் இது பெரும் பிரச்னையாக இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார் சார்பில் உணவு வழங்கப்பட்டது.

The post குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயிகளுக்கு உணவு வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai District Farmers Grievance Meeting ,Sivaganga Collector ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் மக்களின்...