×

சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் மாநகர பேருந்துகளுக்கு தனி பாதை: நெரிசல், விபத்துகளை தவிர்க்க ஏற்பாடு, சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆய்வு

 

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மாநகர பேருந்துகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. இதில் 31 பணிமனைகளில் 629 வழித்தடங்களில் மொத்த 3,436 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை மாநகர பேருந்துகளில் பெரும்பாலானவை நடு ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவது மற்றும் இறக்குவது, மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்காரணமாக, சில நேரங்களில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் இடையே வாக்குவாதம் உள்ளிட்ட மோதல்கள் ஏற்படுகின்றன.

மேலும், போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக அமைவதுடன், சில நேரங்களில் வாகன விபத்துகளும் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, ‘பஸ் பே’ எனும் திட்டத்தையே சென்னை மாநகராட்சியில் நடைமுறைப்படுத்த அரசு தற்போது ஆயத்தமாகி உள்ளது. இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் பணியில் தற்போது அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ‘பஸ் பே’ என்பது பேருந்து மட்டுமே பயணிப்பதற்கான தனி பாதை ஆகும். பேருந்துகள் தடையில்லாமல் பயணிப்பதை உறுதிப்படுத்தும்.

இந்த பாதையானது, பேருந்து நிறுத்தம் வருவதற்கு சில மீட்டர் முன்னாடியே தொடங்கிவிடும். அது பேருந்து நிறுத்தம் தாண்டியும் சில மீட்டர் இடைவெளிக்கு நீண்டிருக்கும். பேருந்துகள் சுலபமாக பேருந்து நிறுத்தத்திற்கு வந்துவிட்டு, பின்னர் தடையில்லாமல் வெளியேறுவதை உறுதிச் செய்யும் விதமாக இந்த பாதை இருக்கும். மேலும், பயணிகள் பத்திரமாக பேருந்தில் ஏறி, இறங்கவும் இது வழிவகுக்கும். இதன் அடிப்படையிலேயே இந்த ‘பஸ் பே’ திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர போக்குவரத்துத் துறை களமிறங்கி இருக்கிறது.

* அபராதம்
இந்த பேருந்துக்கான வழித்தடத்தில் மற்ற வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். இதை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நெரிசல் மற்றும் விபத்தில்லா போக்குவரத்தையும் உருவாக்குவதே முக்கிய நோக்கமாகும். மேலும், சிரமம் இல்லா பயணத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கிலும் இந்த ‘பஸ் பே’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

* முதற்கட்டமாக…
சென்னையில் முதற்கட்டமாக கிண்டி முதல் கோயம்பேடு சிஎம்பிடி பேருந்து நிறுத்தம் வரையிலும், தாம்பரம் வரையிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பேருந்துகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தியே பயணிகளை ஏற்றுவது மற்றும் இறக்குவது ஆகியவற்றை செய்ய வேண்டும். இடையில் நிறுத்தி பயணிகளை ஏற்றவோ இறக்கவோ கூடாது. தனி பாதையை பயன்படுத்துவதை ஒவ்வொரு பேருந்து ஓட்டுநரும் உறுதி செய்ய வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் நிறுத்தத்தை தாண்டி பேருந்தை நிறுத்தப்படுவதும் தவிர்க்கப்படும், என கூறப்படுகிறது.

The post சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் மாநகர பேருந்துகளுக்கு தனி பாதை: நெரிசல், விபத்துகளை தவிர்க்க ஏற்பாடு, சாத்தியக்கூறுகளை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Metropolitan Transport Corporation ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...