×

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் 2,668 அடி உயர மலை மீது மகாதீபம்: விண்ணதிர ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ பக்தி முழக்கம், 40 லட்சம் பக்தர்கள் திரண்டனர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, 2,668 அடி உயர மலை மீது ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தர்களின் பக்தி முழக்கம் விண்ணதிர மகா தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி கொட்டும் மழையிலும் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகவும், ஆறு ஆதாரத் தலங்களில் மணிப்பூரக தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்திருக்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். ஞான தபோதனரை வாவென்று அழைக்கும் அண்ணாமலை தென்னகத்து கயிலாயம் எனும் சிறப்பை பெற்றது.

எண்ணற்ற சித்தர்களும், மகான்களும் வழிபட்ட பெருமைக்குரிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா உலக பிரசித்திபெற்றது. அதன்படி, இந்த ஆண்டு தீபத்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் உற்சவம் நடந்தது. அதையொட்டி, தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவு உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளும் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் 6ம் நாளான்று வெள்ளித் தேரோட்டமும், 7ம் நாளான்று மகா தேரோட்டமும் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.

தீபத்திருவிழா உற்சவத்தின் 10ம் நாளான நேற்று மகாதீப திருவிழா கோலாகலாமாக நடந்தது. விழாவை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவில் இருந்தே திருவண்ணாமலையில் திரண்டிருந்தனர். விழாவின் தொடக்கமாக, நேற்று அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதையொட்டி, அதிகாலை 2.30 மணி முதல் 3.45 மணிவரை சுவாமிக்கு பரணி அபிஷேகம் நடந்தது. அதே நேரத்தில், மகா மண்டபத்தில் பிரதோஷ நந்தியின் வலதுபுறம் ஐந்து மடக்குகள் வைத்து தீபம் ஏற்றப்பட்டது.

பின்னர், பரிச்சாரக சிவாச்சாரியார்கள் மூலம் மகா மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, ரதவிளக்குகளை கடந்து 2ம் பிரகாரம், 3ம் பிரகாரம் வழியாக வந்து அனைத்து சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. நிறைவாக, சொர்ணபைரவர் சன்னதியில் மடக்கு தீபம் காட்சியளித்தது. பஞ்சபூதங்களை அரசாளும் இறைவன், ஏகனாகவும் அனேகனாகனாவும் அருள்பாலித்து (பஞ்மூர்த்திகளாக) படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை செய்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

பரணி தீபத்தை முன்னிட்டு, ஆன்லைன் டிக்கெட் மற்றும் கட்டளைதாரர், உபயதாரர் அனுமதி அட்டை வைத்திருந்த சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து, மகா தீபப்பெருவிழா நேற்று மாலை தொடங்கியது. பகல் 2 மணியளவில் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாலை 4.30 மணி முதல், பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் அலங்கார ரூபத்தில் கோயில் 3ம் பிரகாரம் தீபதரிசன மண்டபத்தில் எழுந்தருளினர்.

பின்னர், உமையாளுக்கு இடபாகம் வழங்கிய அண்ணாமலையார், ‘அர்த்தநாரீஸ்வரர்’ திருக்கோலத்தில் ஆனந்த தாண்டவத்துடன் மாலை 5.57 மணியளவில் கோயில் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார். ஆண்டுக்கு ஒருமுறை, மகா தீபத்தன்று மட்டுமே சில நிமிடங்கள் காட்சிதரும் அர்த்தநாரீஸ்வர் அருட்காட்சியை தரிசித்த பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என பக்திப் பரவசத்துடன் விண்ணதிர முழக்கமிட்டனர். அதைத்தொடர்ந்து, மாலை 6 மணியளவில் கோயில் கொடிமரம் அருகே அகண்டதீபம் ஏற்றப்பட்டது.

அதே நேரத்தில், இறைவனின் திருவடிவமான 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் துதி, பாமாலை, சங்கொலி முழங்க, பாரம்பரிய வழக்கப்படி பருவதராஜ குலத்தினர் மகா தீபம் ஏற்றினர். அப்போது, அகந்தை அழித்து அருள்ஒளி பெருக்கும் அண்ணாமலையார், ஜோதிப்பிழம்பாக காட்சியளித்தார். மலைமீது ஜோதிப்பிழம்பாக அண்ணாமலையார் காட்சியளித்ததும், கோயிலின் அனைத்து பிரகாரங்களும் தீபஒளியால் ஜொலித்தது. நகரெங்கும் வண்ணயமமான வாண வேடிக்கைகள் அதிர்ந்தன. வீடுகளில் நெய்தீபம் ஏற்றி மக்கள் வழிபட்டனர்.

கிரிவலப்பாதையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மெய்யுருக மகாதீபத்தை தரிசித்தனர். தீப ஒளியால் திருவண்ணாமலை நகரமே தேவலோகம் போல காட்சியளித்தது. மகாதீப பெருவிழாவை தரிசிக்க, வரலாறு காணாத அளவில் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலையில் திரண்டிருந்தனர். கோயில், மாட வீதி, கிரிவலப்பாதை என காணும் திசையெங்கும் பக்தர்கள் வெள்ளத்தால் மூழ்கியிருந்தது. கிரிவலப்பாதையில் நடந்து செல்ல இயலாமல், நகர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. அவ்வப்போது மழை பெய்தாலும் பக்தர்கள் இடைவெளி விடாமல் குடைபிடித்தபடி கிரிவலம் சென்றனர்.

கிரிவலப்பாதை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. குடிநீர், பால், மோர் போன்றவையும் வழங்கப்பட்டன. விழாவில், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, உள்துறை செயலாளர் அமுதா, உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன், கலெக்டர் பா.முருகேஷ், கூடுதல் டிஜிபி அருண், ஐஜி கண்ணன், டிஐஜி முத்துசாமி, எஸ்பி கார்த்திகேயன், எம்பி அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், அரசு சமூக பாதுகாப்புவாரிய உறுப்பினர் இரா.ரூ.தரன், அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் மீனாட்சிசுந்தரம், ராஜாராம், கோமதிகுணசேகரன், சினம்பெருமாள், நகராட்சித்தலைவர் நிர்மலாவேல்மாறன், கோயில் இணை ஆணையர் ஜோதி, ப.கார்த்திவேல்மாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

* இன்றும் கிரிவலம்
திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி, கார்த்திகை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று மாலை 3.58 மணிக்கு தொடங்கி, இன்று மாலை 3.08 மணிக்கு நிறைவடைகிறது. அதையொட்டி, நேற்று அதிகாலையில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று இரவு விடிய விடிய 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். தொடர்ந்து இன்றும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், சிறப்பு பஸ்கள் இயக்கம், பாதுகாப்பு ஏற்பாடுகள்
இன்றும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

* மலை மீது 11 நாட்கள் காட்சி தரும் மகா தீபம்
திருவண்ணாமலை அண்ணாமலை மீது, நேற்று மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சிதரும். அதன்படி, டிசம்பர் 6ம் தேதி வரை மகா தீபத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். அதையொட்டி, தினமும் மாலை 6 மணிக்கு மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். அதற்காக, சுழற்சி முறையில் கோயில் திருப்பணியாளர்கள் மற்றும் பருவதராஜகுலத்தினர் மலைமீது முகாமிட்டு தீபம் ஏற்றும் திருப்பணியை மேற்கொள்கின்றனர். தீபம் ஏற்றுவதற்கு தேவையான நெய், திரி, கற்பூரம் ஆகியவை, சிறப்பு பூஜைகளுடன் தினமும் கோயிலில் இருந்து மலை உச்சிக்கு கொண்டுசெல்லப்படும்.

* சிறப்பு தரிசனம் ரத்து
திருவண்ணாமலைக்கு வரும் 6ம் தேதி வரை பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால், அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மட்டுமே அனுமதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மகா தீபத்துக்கு 4,500 கிலோ நெய்
அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்ற 4,500 கிலோ நெய், 1,200 மீட்டர் திரி (காடா துணி), 20 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. மகா தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரை ஐந்தரை அடி உயரம் கொண்டது. மகாதீப கொப்பரையில் அர்த்தநாரீஸ்வரர் திருவுருவம் தீட்டப்பட்டுள்ளது.

* 2700 சிறப்பு பஸ்கள், 20 ரயில்கள் இயக்கம், 14,000 போலீசார் பாதுகாப்பு
ஏடிஜிபி (சட்டம் ஒழுங்கு) அருண் தலைமையில், வடக்கு மண்டல ஐஜி கண்ணன், 5 டிஐஜி, 30 எஸ்பிக்கள் உள்பட 14 ஆயிரம் போலீசார் மற்றும் 180 கமாண்டோ வீரர்கள்(எஸ்டிஎப்) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட டிரோன்கள், 623 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்தது. தீபத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் மற்றும் 50 ஏசி பஸ்கள் உள்பட 2,700 சிறப்பு பஸ்கள், 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

* ஐயங்குளத்தில் 3 நாட்கள் தெப்பல் உற்சவம்
தீபத்திருவிழாவின் தொடக்கமாக மூன்று நாட்கள் எல்லை காவல் தெய்வ வழிபாடு நடைபெறுவதை போல, விழாவின் நிறைவாக மூன்று நாட்கள் ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுவது தீபத்திருவிழாவின் சிறப்பாகும். அதன்படி, தீபத்திருவிழாவின் நிறைவாக இன்று முதல் வரும் 29ம் தேதி வரை, ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறும். அதையொட்டி, முதல் நாளான இன்று இரவு 9 மணி அளவில் சந்திரசேகரர் தெப்பலில் பவனி வந்து அருள்பாலிக்கிறார். அதைத்தொடர்ந்து, நாளை (28ம் தேதி) இரவு 9 மணி அளவில், ஐயங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் பவனியும், வரும் 29ம் தேதி தேதி இரவு சுப்பிரமணியர் தெப்பல் பவனியும் நடைபெறும்.

* ‘மகாதீபத்தை தரிசிக்க மலையேற 2500 பேருக்கு மட்டுமே அனுமதி. முதலில் வருபவர்களே முன்னுரிமை’ என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான அனுமதி அட்டை வாங்க திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முன்பு நேற்று அதிகாலை 5 மணிக்கு கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. 6 மணிக்கு நுழைவு வாயில் திறக்கும் முன்பே, கல்லூரி சுற்றுச்சுவர் மீது ஏறி குதிக்க சிலர் முயற்சித்தனர். அதனால், அந்த சுற்றுச்சுவர் சரிந்து விழுந்தது. ஒருசிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் 2,500 பேருக்கு அனுமதி அட்டை வழங்கி முடிக்கப்பட்டது.

அனுமதி அட்டை பெற்ற பக்தர்கள் மட்டுமே, பே கோபுர தெரு வழியாக மலையேற அனுமதிக்கப்பட்டனர். பிளாஸ்டிக் பொருட்கள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள், கற்பூரம் ஆகியவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. மலையேறும் பக்தர்களின் பாதுகாப்புக்காக கமாண்டோ வீரர்கள், தீயணைப்பு மற்றும் வனத்துறை வீரர்கள் மலைப்பகுதியில் பணியில் ஈடுபட்டனர். மேலும், மலைக்கு செல்லும் வழியில் சிறப்பு மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை வானகரம் பகுதியைச் சேர்ந்த காமராஜ் மகன் நரேஷ் குமார்(33) அனுமதி சீட்டைப் பெற்றுக் கொண்டு மலையேறி சென்று கொண்டிருந்தார்.

மலை ஏறத் தொடங்கும் பகுதியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள முலைப்பால் தீர்த்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் நெஞ்சு வலியால் துடி துடித்து கீழே அமர்ந்தார். அவருடன் வந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து முதலுதவி செய்தனர். ஆனால் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக, அங்கிருந்த மீட்பு குழுவினர் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் நரேஷ்குமார் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

* அமைச்சர்கள் நள்ளிரவில் ஆய்வு
தீபவிழாவையொட்டி 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள், 59 இடங்களில் கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டன. அதேபோல் பார்க்கிங் இடங்களை கண்டறிய இணையதள முகவரி, தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு பஸ்களின் இயக்கம் மற்றும் தற்காலிக பஸ்நிலையங்களில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென ஆய்வு செய்தனர். சிறப்பு பஸ்கள் இயக்கத்தை தொடர்ந்து கண்காணிக்க போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ளார்.

* காணாமல் போன குழந்தைகளை கண்டறிய கைகளில் டேக்
தீப விழாவையொட்டி 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்ற நிலையில், கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை எளிதில் கண்டறியும் வகையில் ஆங்காங்கே போலீசார் முகாமிட்டிருந்தனர். மேலும் குழந்தைகளின் கைகளில், அவர்களது பெற்றோரின் செல்போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய டேக் போலீசாரால் கட்டப்பட்டது.

The post திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலம் 2,668 அடி உயர மலை மீது மகாதீபம்: விண்ணதிர ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ பக்தி முழக்கம், 40 லட்சம் பக்தர்கள் திரண்டனர் appeared first on Dinakaran.

Tags : Karthigai Dibatruvizha Kolagalam ,Tiruvannamalai Mahadipam ,Tiruvannamalai ,Annamalaiyar ,Karthigai Deepthrisha ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...