×

காசா நிலைமையை ஹிட்லருடன் ஒப்பிட்ட சிவசேனா எம்பிக்கு எதிராக இஸ்ரேல் கடிதம்: மக்களவை சபாநாயகருக்கு வந்தது

புதுடெல்லி: காசா நிலைமை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்துக்கு எதிராக இஸ்ரேல் அரசு மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் குறித்து சிவசேனா (உத்தவ்) எம்பி சஞ்சய் ராவத் கடந்த சில தினங்களுக்கு முன் காசாவின் நிலைமை குறித்து இந்தி மொழியில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதில், ‘ஹிட்லர் ஏன் யூதர்களை வெறுத்தார் என்பது தற்போது எனக்கு புரிகிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பதிவை 2.93 லட்சம் பேர் பார்த்திருந்தனர்.

பெரும் சர்ச்சையை இந்த பதிவு கிளப்பியதால், உடனடியாக இந்த பதிவை சஞ்சய் ராவுத் நீக்கினார். ஆனால் இஸ்ரேல் அதிகாரிகள் இந்த பதிவை ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுத்து வைத்துள்ளனர். இதுதொடர்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த புகார் கடிதத்தில், யூத மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சஞ்சய் ராவத் பதிவிட்டுள்ளார்.

இந்திய எம்பி ஒருவர், யூதர்களுக்கு எதிராக கருத்தை தெரிவித்து இருப்பது கண்டிக்கத்தக்கது என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் தொடங்கியதில் இருந்தே, ஆளும் பாஜக அரசை பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட்டு சஞ்சய் ராவத் விமர்சனம் செய்து வருகிறார். மேலும் மோடி அரசுக்கு பெகாசஸ் உளவு மென்பொருளை இஸ்ரேல் வழங்கியதால், அந்த நாட்டை இந்தியா ஆதரிப்பதாகவும் கருத்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காசா நிலைமையை ஹிட்லருடன் ஒப்பிட்ட சிவசேனா எம்பிக்கு எதிராக இஸ்ரேல் கடிதம்: மக்களவை சபாநாயகருக்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : Israel ,Sivasena ,Gaza ,Hitler ,New Delhi ,Sanjay Rawat ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...