×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பரணி தீபம் கோயில் கருவறையின் முன்பு ஏற்றப்பட்டது. பரணி தீப தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்குள் குழுமியிருந்தனர். கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதன்படி, இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கார்த்திதை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3.40 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாடவீதி உலாவும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

கார்த்திகை தீப தரிசனம் காண சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக பல சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது! appeared first on Dinakaran.

Tags : Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Parani ,Karthigai Deepat Festival ,Parani Deepam ,
× RELATED சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு...