×

சென்னை காவல் நிலையங்களில் பணிபுரிந்த 132 நுண்ணறிவு பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்: ஆணையர் நடவடிக்கை

சென்னை, நவ.26: சென்னையில் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக செயல்பட்டது, போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை வடக்கு மற்றும் மேற்கு மண்டலத்தில் பணியாற்றி வந்த 15 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 80க்கும் மேற்பட்ட காவலர்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், அடுத்தகட்டமாக நுண்ணறிவு பிரிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் பிரச்னைகள் குறித்து முன்கூட்டியே அறிந்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் தடுத்து நிறுத்தும் பணியை நுண்ணறிவு பிரிவை சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர். குறிப்பாக பதற்றம் நிறைந்த மாவட்டங்களில் இவர்களின் பணி சிறப்பாக இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

இந்நிலையில் தான் தற்போது சென்னையில் வண்ணாரப்பேட்டை, தி.நகர், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், அடையாறு உள்பட 12 காவல் மாவட்டங்களில் உள்ள 132 காவல் நிலையங்களில் பணியாற்றி வந்த நுண்ணறிவு பிரிவு காவலர்களை பணியிட மாற்றம் செய்து காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த நுண்ணறிவு காவலர்கள் அதே மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நேரத்தில் இத்தகைய பணி இடமாற்றம் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில்தான் தமிழ்நாடு காவல்துறை சார்பில் நுண்ணறிவு பிரிவில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. அதன்படி இதற்கு ஏற்ப இந்த பணி இடமாறுதல் இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

The post சென்னை காவல் நிலையங்களில் பணிபுரிந்த 132 நுண்ணறிவு பிரிவு காவலர்கள் பணியிட மாற்றம்: ஆணையர் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Intelligence ,Chennai ,Ganja ,Gutka ,132 Intelligence Division ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்