×

திருவேற்காட்டில் உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட கழிவுநீர் அகற்றும் வாகனத்திற்கு அபராதம்: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

பூந்தமல்லி, நவ. 26: திருவேற்காட்டில்,உரிய ஆவணம் இல்லாத கழிவுநீர் அகற்றும் வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காமலும், உரிமம் பெறாமலும் கழிவுநீர் வாகனங்களை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதியின்றி இயக்கப்படும் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் வேலப்பன்சாவடி பகுதியில் கூவம் ஆற்றங்கரை மற்றும் மழைநீர் கழிவுநீர் கால்வாய்களில் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் கழிவு நீரை கொட்டுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன் தினம் இரவு திருவேற்காடு நகராட்சி சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில் ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதியில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த கழிவுநீர் அகற்றும் லாரி குறித்து விசாரித்தனர். விசாரணையில் உரிய ஆவணங்கள் இன்றி அந்த கழிவுநீர் அகற்றும் வாகனம் இயக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு ₹5,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னர், வேலப்பன்சாவடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது அந்த மருத்துவமனை வளாகத்தில் தேவையின்றி வைக்கப்பட்டிருந்த பொருட்களில் மழைநீர் தேங்கி டெங்கு கொசு புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தேவையற்ற அந்த பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து கொசு புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்ததால் அம்மருத்துவமனைக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

The post திருவேற்காட்டில் உரிய ஆவணமின்றி இயக்கப்பட்ட கழிவுநீர் அகற்றும் வாகனத்திற்கு அபராதம்: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvekkad ,Poontamalli ,Thiruvekkad ,Tiruvekkadu ,Dinakaran ,
× RELATED திருவேற்காட்டில் கூவம்...