×

வரத்து கால்வாய் குறுக்கே அடைப்பு: வைகை தண்ணீர் வருவதில் சிக்கல்

இளையான்குடி, நவ.26: பார்திபனூர் இடது பிரதான மதகு மூலம் வைகை தண்ணீர், சாலைக்கிராமம் வரத்து கால்வாய் வழியாக நெட்டூர், ஆலம்பச்சேரி, குறிச்சி, பிராமணக்குறிச்சி, முனைவென்றி, அதிரை, திருவுடையார்புரம், கபேரியல்பட்டிணம், சிறுபாலை, புலியூர் ஆகிய கிராமங்களை கடந்து கடைசியில் சாலைக்கிராமம் பெரிய கண்மாய்க்கு வந்தடைகிறது. வைகையில் தண்ணீர் திறந்து வரும்போது இந்த கால்வாய் மூலம் சுமார்30 கண்மாய்கள் நிரம்பி, பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது.

ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுபாலை முதல் அரியாண்டிபுரம் வரை 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரதம மந்திரி கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கப்பட்டது. வரத்துக்கால்வாய் குறுக்கே செல்லும் இந்த சாலையில் புதிய பாலம் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்து உள்ளது. ஆனால் கால்வாயின் குறுக்கே தற்காலிகமாக அமைக்கப்பட்ட மண் பாலம் இதுவரை அகற்றப்படவில்லை.

தற்போது வைகை தண்ணீர் சாலைக்கிராமம் வரத்துக்கால்வாய் வழியாக திறந்து விடவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை எழுப்பியுள்ள நிலையில், குறுக்கே மண் மேடு அடைத்துள்ளதால் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பொதுப்பணித் துறையினர், ஆய்வு செய்வதும் இல்லை. கண்டுகொள்வதும் இல்லை என நீர்பாசன கமிட்டியினர் புகார் தெரிவித்துள்ளனர். அதனால் இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வரத்து கால்வாய் குறுக்கே அடைப்பு: வைகை தண்ணீர் வருவதில் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : Barathu Canal ,Vaigai ,Ilayayankudi ,Parthipanur ,Saligram ,Varattu Canal ,Nettur ,Alambacherry ,Dinakaran ,
× RELATED நீர்மட்டம் 56 அடியாக குறைந்ததால் வைகை...