சிவகங்கை, நவ.26: சிவகங்கை மறை மாவட்ட ஆயராக மதுரை மறை வட்ட அருள்பணியாளர் லூர்து ஆனந்தம் கடந்த செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே திருவரங்கம் கிராமத்தை சேர்ந்த லூர்துஆனந்தம் சிவகங்கை மறை மாவட்ட ஆயராக பொறுப்பேற்கும் திருநிலைப்பாட்டு விழா இன்று மாலை 4.30மணிக்கு சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. லூர்துஆனந்தம் கடந்த 1986ம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். பின்னர் பேராயரின் செயலர், பங்குத்தந்தை, வட்டார அதிபர், இறையியல் கல்லூரி பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
சிவகங்கை மறை மாவட்டத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்கள் உள்ளன. சிவகங்கை மறைமாவட்டம் தொடங்கப்பட்டு முதல் ஆயரின் திருநிலைப்பாடு கடந்த 1987ம் ஆண்டும், இரண்டாவது ஆயரின் திருநிலைப்பாடு 2005ம் ஆண்டும் நடைபெற்றுள்ளது. தற்போது மூன்றாவது ஆயராக லூர்துஆனந்தம் பொறுப்பேற்கும் திருநிலைப்பாட்டு விழா 17ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு திருத்தந்தையின் இந்திய தூதர் லியோபோல்தோஜிரெல்லி முன்னிலை வகிக்கிறார்.
பேராயர் அந்தோணிபாப்புசாமி, ஆயர்கள் ஸ்டீபன் மற்றும் சூசைமாணிக்கம் ஆகியோர் திருச்சடங்குகளை நிறைவேற்ற உள்ளனர். சென்னை, மயிலை உயர் மறை மாவட்டபேராயர் ஜார்ஜ்அந்தோணிசாமி மறையுரையும், பிரான்சிஸ்கலிஸ்து தலைமையில் வாழ்த்துக் கூட்டமும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிஎஸ்ஐ பேராயர் தேவசகாயம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரிகருப்பன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர்அல்போன்ஸ், இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ மற்றும் அரசியல் கட்சியினர், சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் தமிழ்நாட்டில் தற்போது பணியில் உள்ள 18ஆயர்கள் உள்ளிட்ட 25 பேர் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயர்கள், பங்குத் தந்தைகள், அருட்சகோதரிகள், இறை மக்கள் உள்ளிட்ட சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
The post சிவகங்கை மறைமாவட்ட ஆயர் இன்று பொறுப்பேற்பு appeared first on Dinakaran.