×

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம்: உள்நாட்டு உற்பத்தி திறன் மீதான நம்பிக்கையை அதிகரித்ததாக பெருமிதம்

பெங்களூரு: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, இது நம் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி திறன் மீதான நம்பிக்கையை அதிகரித்ததாக தெரிவித்தார். ஐந்து மாநில தேர்தலில் சட்டீஸ்கர், மிசோரம், மபியில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நேற்று ராஜஸ்தானில் வாக்குப்பதிவு நடந்தது. அடுத்ததாக வரும் 30ம் தேதி இறுதியாக தெலங்கானாவில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும் தெலங்கானாவில் முகாமிட்டுள்ளனர். தெலங்கானாவில் நேற்று பிரசாரம் செய்ய செல்வதற்கு முன்பாக பிரதமர் மோடி நேற்று பெங்களூருவிற்கு வந்தார்.

பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் (எச்ஏஎல்) மையத்தை அவர் பார்வையிட்டார். ராணுவ தளவாடங்கள், இலகுரக ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் ஆகியவற்றை எச்ஏஎல் உற்பத்தி செய்துவருகிறது. அங்கு நடந்து வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த பிரதமர் மோடி, பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும், வெளிநாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை விற்பதற்கும் ஒன்றிய அரசு எடுத்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

இதைத் தொடர்ந்து, எச்ஏஎல்லில் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணித்தார். இதற்காக விமானப்படை வீரர்கள் உடையணிந்து தலையில் தொப்பியுடன் மிடுக்காக வந்த பிரதமர் மோடி, அங்குள்ளவர்களை பார்த்து கை அசைத்தார். இரு இருக்கைகள் கொண்ட தேஜஸ் விமானத்தில் பின்இருக்கையில் அமர்ந்து அவர் பயணித்தார். இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவில் புகைப்படங்களை பதிவிட்ட பிரதமர் மோடி, ‘‘தேஜஸ் போர் விமானத்தில் செய்த பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த பயண அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக இருந்தது.

உள்நாட்டு உற்பத்தி திறன் மீதான என் நம்பிக்கையை அதிகரித்தது. இது நம் நாட்டின் மீதான பெருமையுணர்வையும், ஆற்றல் மீதான நம்பிக்கையையும் அதிகரித்தது. மேலும், இதில் பறக்கும்போது நமது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது. தற்சார்பை பொறுத்தமட்டில் உலகின் எந்த நாட்டிற்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல. இந்திய விமானப்படை, டிஆர்டிஓ, எச்.ஏ.எல் மற்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்’’ என்றார். எடை குறைவான தேஜஸ் போர் விமானங்கள் ஒலியை விட 1.6 மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும். மணிக்கு 1,975 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

* தேர்தல் ஸ்டன்ட்: காங்கிரஸ் கண்டனம்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், ‘‘தேஜஸ் என்பது நமது உள்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் திறன், பல ஆண்டாக உறுதியுடன் உருவாக்கப்பட்ட முயற்சிக்கான மற்றொரு உதாரணம். கடந்த 2011ல் இந்த விமானம் செயல்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பல கட்ட ஆய்வுக்குப் பின் 2016ல் விமானப்படையில் சேர்க்கப்பட்டது. ஆனால், 2014க்கு முந்தைய முயற்சிகள் மற்றும் சாதனைகளை ஒப்புக் கொள்ள மனமில்லாதவருக்கு அதன் பெருமையை மட்டும் எடுத்துக் கொள்வது முக்கியமாக உள்ளது. போட்டோவுக்கு போஸ் தருவது வெறும் தேர்தல் ஸ்டன்ட் தவிர வேறொன்றுமில்லை’’ என்றார்.

* மோடி ஆட்சியில் ரூ.36,468 கோடி ஆர்டர்
எச்ஏஎல் அதிகாரிகள் கூறுகையில், ‘‘தேஜஸ் விமானம் கடந்த 2016ம் ஆண்டு விமானப்படையில் சேர்க்கப்பட்டது. மோடி ஆட்சியில் 83 இலகுரக தேஜஸ் விமானங்கள் ரூ.36,468 கோடிக்கு எச்ஏஎல்லிடம் ஆர்டர் தரப்பட்டுள்ளது. தேஜஸ் எம்கே-2 விமானத்தை மேம்படுத்த ரூ.9,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

The post இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் மோடி பயணம்: உள்நாட்டு உற்பத்தி திறன் மீதான நம்பிக்கையை அதிகரித்ததாக பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,India ,Bengaluru ,Narendra Modi ,Modi ,Dinakaran ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி