×

பாஜ – காங்கிரஸ் இடையே கடும் போட்டி ராஜஸ்தானில் 68% வாக்குப்பதிவு: 4 இடங்களில் மோதல், போலீஸ் துப்பாக்கிச்சூடு; இறுதியாக தெலங்கானாவில் 30ம் தேதி தேர்தல்; டிச.3ல் வாக்கு எண்ணிக்கை

ஜெய்ப்பூர்: ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் 3 மாநிலங்களில் தேர்தல் முடிந்த நிலையில் ராஜஸ்தானில் நேற்று 199 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 68 சதவீத வாக்குகள் பதிவானது. தெலங்கானாவில் நவ.30ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதை தொடர்ந்து 5 மாநிலத்தில் பதிவான வாக்குகள் டிச.3ம் தேதி எண்ணப்படுகின்றன. மிசோரம், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது. இதில் மிசோரமில் நவ.7ம் தேதியும், சட்டீஸ்கரில் இரண்டு கட்டமாக நவ.7 மற்றும் 17ம் தேதியும், ம.பி.யில் ஒரே கட்டமாக நவ.17ம் தேதியும் ஓட்டுப்பதிவு நடந்தது.

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று தேர்தல் நடந்தது. அங்கு காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். மொத்தம் 200 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், கரண்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீர் சிங் கடந்த சில நாட்களுக்கு முன் மரணமடைந்தார். அதையடுத்து அந்த தொகுதியை தவிர்த்து மற்ற 199 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தலில், ஆளும் கட்சியான காங்கிரஸ் – எதிர்க்கட்சியான பாஜ இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது.

மார்க்சிஸ்ட், ராஷ்ட்ரீய லோக் தாந்திரிக் கட்சி, பாரத பழங்குடியினர் கட்சி, ஆம் ஆத்மி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவையும் களத்தில் உள்ளன. இருப்பினும் ஆளும் காங்கிரசுக்கும், பா.ஜவுக்கும் தான் பலத்த போட்டி நிலவியது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரசும், வெற்றி பெற பா.ஜவும் தீவிரமாக போராடின. தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் இந்த கட்சிகள் சார்பில் 1,862 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலுக்காக 51,890 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 2.74 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ராஜஸ்தானை ஒட்டியுள்ள குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், அரியாணா, பஞ்சாப் ஆகிய மாநில எல்லைகள் மூடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. ஜோத்பூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் அசோக் கெலாட், ஜெய்ப்பூர் தொகுதியில் உள்ள பூத்தில் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், ஜலாவர் தொகுதி பூத்தில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, கோட்லாவில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவும், ஒன்றிய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தனது குடும்பத்துடன் ஜோத்பூர் தொகுதியில் உள்ள பூத்திலும், பலோத்ரா தொகுதி பூத்தில் ஒன்றிய அமைச்சர் கைலாஷ் சவுத்திரியும், பா.ஜ மாநில தலைவர் சிபி ஜோஷி அங்குள்ள சித்ரகார்க் தொகுதி பூத்திலும், பா.ஜ எம்பிக்கள் திவ்யாகுமாரி, ராஜ்யவர்த்தன்சிங் ரத்தோர் ஆகியோர் ஜெய்ப்பூர் தொகுதியில் உள்ள பூத்திலும் வாக்களித்தனர்.

இதே போல் மேலும் 5 எம்பிக்கள் தங்கள் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு செய்தனர். இளம் வாக்காளர்கள் அதிக அளவில் காலையிலேயே திரண்டு வாக்களித்தனர். பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு மேலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து வாக்களித்தனர். 4 இடங்களில் மோதல் நடந்தது. காமன் சன்வ்லர் என்ற கிராமத்தில் வாக்குச்சாவடியில் பெரிய மோதல் நடந்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
மொத்தம் 68 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. கடந்த 2018 தேர்தலில் 74.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. தெலங்கானாவில் வருகிற 30ம் தேதி தேர்தல் முடிந்ததும் 5 மாநில வாக்குகள் டிச.3ல் எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஒரு பார்வை
மொத்த தொகுதிகள் 200
தேர்தல் நடந்த தொகுதிகள் 199
மொத்த வாக்காளர்கள் 5.25 கோடி
மொத்த வேட்பாளர்கள் 1862 பேர்
மொத்த பூத்கள் 51,890
பாதுகாப்பு 1.70 லட்சம் வீரர்கள்

* டீக் மாவட்டத்தில் உள்ள காமன் சன்வ்லர் என்ற கிராமத்தில் ஓட்டுப்பதிவின் போது திடீர் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டத்தை கலைக்க போலீசார் 12 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டனர். இந்த மோதலில் போலீஸ்காரர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
* சிகார் மாவட்டத்தில் உள்ள பதேபூரில் 2 குழுக்கள் மோதிக்கொண்டன. அங்குள்ள வாக்குச் சாவடிக்கு வெளியே கல் வீசப்பட்டது. கல் வீச்சில் ஒரு ஜவான் காயமடைந்தார். பொதுமக்கள் யாரும் காயமடையவில்லை. 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* டோங்க் மாவட்டத்தின் உனியாராவில், 40 முதல் 50 பேர் வாக்குச் சாவடிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் அடித்து விரட்டி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
* தோல்பூரின் பாரி தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வெளியே வாக்குச் சாவடி முகவருக்கும், ஒரு நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் இரண்டு வாகனங்கள் சேதமடைந்தன. அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது.

* ராகுல், பிரியங்கா மீது தேர்தல் கமிஷனில் புகார்
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘ராஜஸ்தானில் இலவச மருத்துவம், வட்டியில்லா விவசாய கடன் அளிக்கப்படும். சிலிண்டர் விலை குறைக்கப்படும். ராஜஸ்தானில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என்று தெரிவித்திருந்தார். பிரியங்கா காந்தி வெளியிட்ட பதிவில், ‘உங்கள் ஓட்டு அழகான எதிர்காலத்தை உருவாக்கும். உங்கள் உரிமைகளை பெற காங்கிரஸ் உறுதியளிக்கும்’ என்று தெரிவித்திருந்தார்.
வாக்குப்பதிவுக்கு முன் 48 மணிநேரம் அரசியல் கட்சிகள் எவ்வித பிரச்சாரமும் செய்ய தடை உள்ள நிலையில், இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் பாஜ மனு அளித்தது. அதில், ‘எக்ஸ் சமூக வலைதளத்தில் உள்ள ராகுல், பிரியங்கா பதிவுகளை அகற்ற உத்தரவிட வேண்டும். அத்துடன், அவர்கள் எக்ஸ் கணக்குகளை முடக்கி, அவர்களுக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யவேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

* தேர்தல் ஏஜென்ட்கள் 2 பேர் மயங்கி விழுந்து பலி
சுமேர்பூர் தொகுதியின் ஜோராராம் குமாவத்தின் பாஜ வேட்பாளரின் வாக்குச் சாவடி முகவரான சாந்தி லால், வாக்குச்சாவடி எண் 47ல் மயங்கி சரிந்து விழுந்தார். அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை சோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இதே போல் உதய்பூரில் உள்ள வாக்குச் சாவடியில் இருந்த 62 வயதான சத்யேந்திர அரோரா மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

The post பாஜ – காங்கிரஸ் இடையே கடும் போட்டி ராஜஸ்தானில் 68% வாக்குப்பதிவு: 4 இடங்களில் மோதல், போலீஸ் துப்பாக்கிச்சூடு; இறுதியாக தெலங்கானாவில் 30ம் தேதி தேர்தல்; டிச.3ல் வாக்கு எண்ணிக்கை appeared first on Dinakaran.

Tags : Baja-Congress ,Rajasthan ,30th election ,Telangana ,Jaipur ,Bhaja-Congress ,Dinakaran ,
× RELATED மோடியின் வெறுப்பு பேச்சு தேர்தல் ஆணையம் விசாரணை