×

நாடு முழுவதும் பாதிப்பு அதிகரிப்பு பருவநிலை மாற்றத்தால் உச்சத்தில் டெங்கு: வடகிழக்கு மாநிலங்களும் தப்பவில்லை

திமாபூர்: பருவநிலை மாற்றத்தால் நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருவதாக மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஏடிஸ் கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் பெரும்பாலும் வெப்பமண்டல பகுதிகளில் மட்டுமே தாக்கக் கூடியதாக இருந்தது. தற்போது பருவநிலை மாற்றத்தால் இது குளிர்பிரதேசங்களையும் விட்டு வைக்காமல் நாடு முழுவதும் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் டெங்கு பரவும் மாதங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டு 5.6 மாதங்கமாக அதிகரித்துள்ளது.

இது கடந்த 1951-1960 மற்றும் 2012-2021க்கு இடையே ஆண்டுதோறும் 1.69 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளதாக லான்செட் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.2012க்குப் பிறகு இந்தியாவில் டெங்குவின் நிலை மாறிவிட்டது. குறிப்பாக குறைந்த வெப்பநிலை கொண்ட வடகிழக்கு மாநிலங்களில் நிலைமை தலைகீழாகிவிட்டது. இது குறித்து நாகலாந்தின் தேசிய நோய் தொற்றுக் கட்டுப்பாட்டு மைய மாநில திட்ட அதிகாரி டாக்டர் நிசாகோ கிரே கூறுகையில், ‘நாகலாந்தில் கடந்த 8 ஆண்டுக்கு முன் 2015 ஜூன் முதல் முறையாக டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு 2,900 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு இல்லாமை, போதிய மருத்துவ சோதனைகள் இல்லாமை மற்றும் வீட்டு வைத்தியங்களை நம்பியிருப்பதன் காரணமாக பல வழக்குகள் பதிவாகாமல் போகின்றன’’ என்றார். அண்டை மாநிலமான மணிப்பூரில் 2007ல் முதல் முறையாக டெங்கு கண்டறியப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் 13 வரை, 1,338 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது 2022ல் பதிவாகியதை விட 835 அதிகம்.

மலை பிரதேசமான உத்தரகாண்ட்டில் இந்த ஆண்டு 3,000 பேருக்கு டெங்கு பாதித்துள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி வரை இந்தியாவில் கிட்டத்தட்ட 95,000 பேருக்கு பாதிப்பு மற்றும் 91 இறப்புகள் டெங்குவால் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு 303 இறப்புகளுடன் இந்த எண்ணிக்கை 2.33 லட்சம் ஆக இருந்தது.

* தடுப்பூசி அவசியம்
தற்போது உலகிலேயே அதிகமான டெங்கு பாதிப்பை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இதற்கு பருவநிலை மாற்றம், நகரமயமாக்கல், பயணம், வர்த்தகம், வைரஸ் பரிணாமம் மற்றும் தடுப்பூசிகள், சிகிச்சைகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. டெங்கு நிபுணர் நீலிகா மாளவிகா கூறுகையில், ‘‘டெங்குவிற்கான தடுப்பூசியை உருவாக்குவதில் உள்ள முக்கிய சவால், வைரஸ் 4 வெவ்வேறு மாறுபாடுகளைக் கொண்டிருப்பதுதான். இந்த 4 மாறுபாடுகளையும் அழிக்கும் ஒரே தடுப்பூசியை உருவாக்குவது கடினம். ஆனாலும், டெங்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்க வேண்டுமெனில் அதற்கு தடுப்பூசி விரைவில் கண்டுபிடிக்கப்படுவது அவசியம்’’ என்றார்.

The post நாடு முழுவதும் பாதிப்பு அதிகரிப்பு பருவநிலை மாற்றத்தால் உச்சத்தில் டெங்கு: வடகிழக்கு மாநிலங்களும் தப்பவில்லை appeared first on Dinakaran.

Tags : Northeast ,Dimapur ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…