×

காசாவில் 2ம் நாள் போர் நிறுத்தம் மேலும் 14 பணயக் கைதிகள் விடுவிப்பு: பதிலுக்கு 42 பாலஸ்தீனர்கள் விடுதலை

ஜெருசலேம்: இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான ஒப்பந்தத்தின்படி, போர் நிறுத்தத்தில் 2ம் நாளான நேற்று மேலும் 14 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இதற்கு பதிலாக இஸ்ரேல் சிறையில் இருந்து 42 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர். பாலதீனத்தின் காசாவில் கடந்த 6 வாரமாக நடந்த பயங்கர போரைத் தொடர்ந்து, கத்தார், எகிப்து, அமெரிக்கா செய்து வைத்த மத்தியஸ்தத்தின்படி, இஸ்ரேல், ஹமாஸ் படையினர் இடையே 4 நாள் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது. இதில், ஹமாஸ் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலின் 240 பணயக் கைதிகளில் 50 பேரை விடுவிக்கப்படுவார்கள் என்றும் பதிலுக்கு இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் இரு தரப்பும் அறிவித்தன.

இதன்படி, போர் நிறுத்தத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் 13 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இதில் 4 பேர் குழந்தைகள், மற்றவர்கள் பெண்கள், மூதாட்டிகள் ஆவர். கிட்டத்தட்ட 49 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக திரும்பிய அவர்களை குடும்பத்தினரும், உறவினர்களும் கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீருடன் வரவேற்றனர். மருத்துவ சோதனைக்கு பிறகு விடுவிக்கப்பட்ட 13 பேரின் புகைப்படங்களை இஸ்ரேல் வெளியிட்டது. இதற்கு பதிலாக 39 பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், போர் நிறுத்தத்தின் 2ம் நாளான நேற்று மேலும் 14 பிணைக் கைதிகளை விடுவிப்பதாகவும் அவர்களின் பெயர் பட்டியலை ஹமாஸ், இஸ்ரேலிடம் வழங்கியது. உள்ளூர் நேரப்டி இரவுக்குள் அவர்கள் இஸ்ரேல் அழைத்து வரப்படுவார்கள் என இஸ்ரேல் அதிகாரிகள் கூறினர். இதற்கு பதிலாக விடுவிக்கப்படும் 42 பாலஸ்தீன கைதிகளின் பெயர்களை இஸ்ரேல் வெளியிட்டது. இதுதவிர நேற்று முன்தினம் மற்றொரு ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் பிடியிலிரந்து தாய்லாந்தை சேர்ந்த 10 பேரும், பிளிபினோவை சேர்ந்த ஒருவரும் விடுவிக்கப்பட்டனர். இதுதவிர அதிகப்படியான உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களும் ரபா எல்லை வழியாக காசாவிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டன.

* இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் திடீர் தாக்குதல்
காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியப் பெருங்கடலில் இஸ்ரேல் தொழிலதிபர் ஒருவருக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் கப்பலை தாக்கியது ஈரானின் ஷாஹித்-136 ரக டிரோன் என உக்ரைன் தெரிவித்துள்ளது. காசா போரில் ஹமாசுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு ஆதரவு தெரிவித்து லெபனான் எல்லையில் சண்டையிட்டு வருகிறது. இந்த ஹிஸ்புல்லா அமைப்பு ஈரான் உதவியுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post காசாவில் 2ம் நாள் போர் நிறுத்தம் மேலும் 14 பணயக் கைதிகள் விடுவிப்பு: பதிலுக்கு 42 பாலஸ்தீனர்கள் விடுதலை appeared first on Dinakaran.

Tags : Gaza Ceasefire ,Palestinians ,Jerusalem ,Israel ,Hamas ,
× RELATED பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக...