×

பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் திரட்டுவதற்காக ஆயுள் கைதிக்கு விடுப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார், தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ரயில் மறியலில் ஈடுபட்டதற்காக க்யூ பிரிவு போலீசாரால் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 2012ல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் அவருக்கு 28 நாள் சாதாரண விடுப்பு வழங்கக் கோரி அவரது மனைவி வேம்பு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தங்களுக்கு நான்கு பிள்ளைகள், முதல் இரண்டு பிள்ளைகள் மருத்துவம் படித்து வருவதாகவும், மற்ற இரண்டு பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு நிதி ஆதாரம் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கணவர் சிறையில் உள்ள நிலையில் பிள்ளைகளின் படிப்பிற்காக பணம் திரட்டுவது சிரமமாக உள்ளதால், பணம் திரட்டுவதற்கு ஏதுவாக கணவரை விடுப்பில் அனுப்ப வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.நதியாவும், சிறை நிர்வாகம் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக்கும் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து, செந்தில் குமாருக்கு 28 நாள் சாதாரண விடுப்பு வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் வாரம் ஒரு முறை காலை நேரத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தனர்.

The post பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் திரட்டுவதற்காக ஆயுள் கைதிக்கு விடுப்பு: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Senthilkumar ,Cuddalore district ,Tamil Eelam ,
× RELATED சென்னை ராயபுரத்தில் எஸ்.ஐ. மீது தாக்குதல்: இளைஞர் கைது