×

ஓரினச்சேர்க்கையாளர்களிடம் பணம் பறித்தவர்கள் எஸ்.ஐ.யை கத்தியால் குத்திக்கொல்ல முயற்சி: சிறுவன் உட்பட 6 பேர் கைது

புளியங்குடி: ஓரினச்சேர்க்கையாளர்களிடம் பணம் பறிப்பதற்காக காரில் சென்றவர்களை பிடித்த எஸ்ஐயை கத்தியால் குத்திக்கொல்ல முயன்ற சிறுவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டம், புளியங்குடி சிந்தாமணி செக்போஸ்ட்டில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், எஸ்ஐ சஞ்சய்காந்தி ஆகியோர் தலைமையில் நேற்று முன்தினம் வாகன சோதனை நடந்தது. போலீஸ் சோதனை நடந்த இடத்தின் அருகே வேன் மற்றும் ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்ளன. இதனருகே 6 பேர் கொண்ட கும்பல் காரை நிறுத்தி விட்டு நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்டது. இதை வேன் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் தட்டிக்கேட்டனர். அப்போது காரில் இருந்த 6 பேரில் ஒருவர், கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர்கள் செக்போஸ்ட்டில் நின்றிருந்த போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து எஸ்ஐ சஞ்சய்காந்தி விரைந்து வந்து அவர்களை பிடிக்க முயன்றார். அப்போது அக்கும்பல், எஸ்ஐயை கத்தியால் குத்த முயன்றது. அவர், விலகிக் கொள்ளவே அந்த கும்பல் காரை எடுத்துக் கொண்டு வாசுதேவநல்லூரை நோக்கி தப்பிச் சென்றனர். சம்பவம் பற்றி புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் ஒரு பாதையிலும், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலும், எஸ்ஐக்கள் சஞ்சய்காந்தி, மாடசாமி, போலீசார் திருப்பதி ஆகியோர் தலைமையிலும் போலீசார் தனித்தனியாக 3 வழிகளில் காரில் தப்பிய கும்பலை விரட்டினர். உள்ளாறு அருகே காரை டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலீசார் மடக்கினர்.

விசாரணையில் காரில் இருந்த 6 பேரில் இருவர் 17 வயது சிறுவர்கள் என்பதும், மற்ற 4 பேர் சிவகிரியை சேர்ந்த ராமர் மகன் கனகராஜ் (21), உள்ளாறு பன்னீர்செல்வம் மகன் செந்தமிழ்செல்வன் (23), சிவகிரியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுனில்குமார் (25), கனகராஜ் மகன் சதீஷ் ஆனந்த் (21) என்பது தெரிய வந்தது. இவர்கள் 6 பேரும், ‘கிரைண்டர் ஆப்’ என்ற செயலியில் இணைந்த ஓரினச்சேர்க்கை நபர்களை ஒரு இடத்திற்கு வரவழைத்து அவர்களிடம் பணம் பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடம் இருந்து 3 கத்திகளையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் புளியங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஓரினச்சேர்க்கையாளர்களிடம் பணம் பறித்தவர்கள் எஸ்.ஐ.யை கத்தியால் குத்திக்கொல்ல முயற்சி: சிறுவன் உட்பட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Puliangudi ,
× RELATED சிவகிரி அருகே பைக்கில் மதுபாட்டில்கள் கடத்திய வாலிபர் கைது