நெல்லை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு சமூக வலைதளத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே மாநில தலைவரை மாற்றக் கோரி நெல்லை காங்கிரஸ் அலுவலகத்தை மகளிரணியினர் கருப்புக் கொடியுடன் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.. நெல்லை மாவட்டம் திசையன்விளையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று நெல்லை வந்திருந்த நிலையில், அவருக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜா, காங்கிரஸ் நிர்வாகி அம்புரோஸ் (35) ஆகிய இருவரும் சமூக வலைதளத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகி முத்துகிருஷ்ணன், மூன்றடைப்பு காவல்நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து அம்புரோசை கைது செய்தனர். ராஜாவை தேடி வருகின்றனர். இதற்கிடையே கே.எஸ்.அழகிரியை மாற்றக் கோரி நெல்லையில் நேற்று மகிளா காங்கிரஸ் சார்பில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. மாநில மகிளா காங். இணைச் செயலாளர் கமலா, பொதுச் செயலாளர் குளோரிந்தாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நெல்லை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மகளிரணியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவரும் கருப்பு சேலை அணிந்து கருப்புக் கொடியேந்தி போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது மாநில பொதுச் செயலாளர் குளோரிந்தாள் கூறுகையில், ‘தற்போது கட்சிக்கு தொடர்பு இல்லாதவர்களை பூத் கமிட்டி உறுப்பினர்களாக நியமனம் செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்காக உண்மையாக பணியாற்றுபவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இதே நிலை நீடித்தால் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது கடினம். எனவே மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை உடனே மாற்றக்கோரி தான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’ என்றார்.
The post மாநில தலைவரை மாற்றக் கோரி கருப்புக்கொடி போராட்டம் கே.எஸ்.அழகிரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காங்கிரஸ் நிர்வாகி அதிரடி கைது: நெல்லையில் பரபரப்பு appeared first on Dinakaran.