×

மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி: யானை தாக்கி தொழிலாளி சாவு

அந்தியூர்: அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் வனப்பகுதி தமிழக கர்நாடக மாநில எல்லை பகுதியில் 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மலைப்பகுதியில் உள்ள தங்களது சொந்த நிலங்களில் ராகி, கம்பு, மக்காச்சோளம், அவரை உள்ளிட்டவைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இங்குள்ள தம்புரெட்டி கிரையம்பாளையத்தை சேர்ந்த புட்டன் என்பவர், தனது விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள மக்காச்சோளப்பயிர்களை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க தனது தோட்டத்தை சுற்றி மின் வேலி அமைத்துள்ளார்.

இந்த மின்வேலியில் சிக்கி நேற்று அதிகாலை ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதுதொடர்பாக விவசாயி புட்டன் மீது பர்கூர் வனத்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். தொழிலாளி பலி: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம், பாண்டியார் தேயிலை கோட்டம், பால் மேடு சரக்கத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் பிரான்சிஸ் (56).

இவர், நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் பணி முடித்து வீடு நோக்கி திரும்பி கொண்டிருந்தார். தொழிலாளர் குடியிருப்பு பகுதியை ஒட்டி செல்லும் போது அந்த வழியாக வந்த காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த பிரான்சிஸ் மனைவி விமலா ஜூலியட்டிடம் வனத்துறை சார்பில் அளிக்கப்படும் உடனடி உதவித்தொகை ரூ.50,000 வழங்கப்பட்டது.

The post மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி: யானை தாக்கி தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Andiyur ,Tamil Nadu ,Karnataka ,
× RELATED தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது...