×

ராஜஸ்தானில் வாக்குப்பதிவு விறுவிறு: மாலை 5 மணி நிலவரப்படி 68% வாக்குகள் பதிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 68% வாக்குகள் பதிவாகி உள்ளன. ராஜஸ்தான் சட்டப் பேரவைத் தேர்தலில், ஆளும் கட்சியான காங்கிரஸ் – எதிர்க்கட்சியான பாஜக இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது. மா.கம்யூ, ராஷ்ட்ரீய லோக் தாந்திரிக் கட்சி, பாரத பழங்குடியினர் கட்சி, ஆம் ஆத்மி, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி உள்ளிட்டவை களத்தில் உள்ளன. மாநிலத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் வழக்கமாக உள்ள நிலையில், ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்குமா காங்கிரஸ்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மொத்தம் 200 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், கரண்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீர் சிங் கடந்த சில நாட்களுக்கு முன் மரணமடைந்தார். அதையடுத்து அந்த தொகுதியை தவிர்த்து மற்ற 199 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 199 தொகுதிகளில் 1,862 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களின் வெற்றி தோல்வியை இன்று வாக்களிக்க தகுதியுள்ள சுமார் 5.25 கோடி வாக்காளர்கள் தீர்மானிப்பார்கள்.

வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்வதற்காக மாநிலம் முழுவதும் 51,507-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 2.74 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மாநில காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், துணை ராணுவப் படையினர், பிற மாநில ஆயுதப் படையினர் உள்பட 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை முதல் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி 68% வாக்குகள் பதிவாகி உள்ளன. ராஜஸ்தானில் உள்ள 33 மாவட்டங்களில் அதிகபட்சமாக ஜெய்சல்மர் மாவட்டத்தில் 77% வாக்குகள் பதிவாகியுள்ளது.

The post ராஜஸ்தானில் வாக்குப்பதிவு விறுவிறு: மாலை 5 மணி நிலவரப்படி 68% வாக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Jaipur ,Rajasthan State Legislature ,
× RELATED சட்டவிரோதமாக மாட்டிறைச்சி விற்றதால்...