திருச்சி: பூலோக வைகுண்டம், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான என்ற சிறப்புகளை பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இக்கோயிலில் நாளை மறுதினம் (திங்கள்கிழமை) கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கார்த்திகை கோபுரம் அருகில் சொக்கப்பனை கொளுத்துவது வழக்கம். அதனை தொடர்ந்து நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்நிலையில் சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் பணி நேற்று கார்த்திகை கோபுரம் அருகில் நடந்தது. 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் சந்தனம் தடவி, மாவிலை, பூமாலை கட்டி அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை கூற புனித நீர் தெளிக்கப்பட்டது.
அதன்பின் முகூர்த்தக்காலை கோயில் ஊழியர்கள் நட்டனர். முகூர்த்தக்கால் நட்டதும் கோயில் யானைகள் ஆண்டாள், லட்சுமி துதிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின. இந்த பந்தக்காலை சுற்றி 15 அடி அகலத்திற்கும், 20 அடி உயரத்திற்கும் சொக்கப்பனை அமைக்கப்பட உள்ளது. இதேபோல் திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலிலும் கார்த்திகை தீப திருநாளையொட்டி நேற்று முகூர்த்தக்கால் நடும் உற்சவம் நடந்தது. இதையொட்டி அங்கு விநாயகர், அஸ்திர தேவருடன் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நாளை இரவு 7 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தும் உற்சவம் நடக்கிறது.
The post கார்த்திகை தீப திருநாள்: ஸ்ரீரங்கம் கோயிலில் சொக்கப்பனை முகூர்த்தக்கால் நடப்பட்டது appeared first on Dinakaran.