×

தமிழகத்தில் தற்போது தினசரி 40-50 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழகத்தில் தற்போது தினசரி 40-50 பேருக்கு டெங்கு பாதிப்ப ஏற்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார். பருவகால மழை நோய்களை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறையால் கடந்த அக்டோபர் மாதம் முதல் தமிழகத்தில் வாரந்தோறும் 1000 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இன்று 5வது வார மருத்துவ முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக்தில் டெங்கு பாதிப்பு, மருத்துவ முகாம்கள், அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை நிலவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே, தமிழகத்தில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 29, நவம்பர் 4, 11, 18 ஆகிய தேதிகளில் மருத்துவ முகாம்கள் நடைபெற்று முடிந்தன. இதில் ஒவ்வொரு முறையும் 1000 முதல் 2000 மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளன. இதுவரையில் 8,380 மருத்துவ முகாம்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த மருத்துவ முகாம்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டாலும், அதில் 400 – 500 பேருக்கு மட்டுமே நோய் பாதிப்பு இருந்துள்ளது. இந்த மருத்துவ முகாம்கள் டிசம்பர் 30 வரையில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெற உள்ளன. சென்னையில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் , ஒரு மண்டலத்துக்கு 3 முகாம்கள் என மொத்தம் 45 முகாம்கள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் (நவம்பர் இறுதி கட்டம்) தற்போது வரையில் 7,059 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தினசரி ஒருநாளைக்கு 40 முதல் 50 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது கடந்த வருடங்களை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை என்பது குறைவு. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தினமும் பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கால்வலி, தலைவலி என எல்லா பரிசோதனைகளும் எடுக்கப்படுகின்றன. கால் மரத்துப்போவது போல இருப்பதால், பிசியோதைரபியும் செய்யப்படுகிறது. செந்தில் பாலாஜி எப்போது டிஸ்சார்ஜ் என்பது மருத்துவ குழுவினர் கூறுவார்கள். சென்னை மாநகராட்சி முழுக்க தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

அதில் வீட்டு வளர்ப்பு நாய்கள் எத்தனை, தெரு நாய்கள் எத்தனை, எத்தனை நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தெருநாய் ஒருவரை கடித்தாலே மாநகராட்சிக்கு போன் செய்து புகார் கூறி விடுங்கள். சென்னை மாநகராட்சியில் ஒரு பகுதியில் ஒரு தெருநாய் 27 பேரை கடித்ததாக கூறுகிறார்கள். ஒருவரை கடித்த உடனே மக்கள் மாநகராட்சிக்கு புகார் தெரிவித்து இருக்கலாம். தெருநாய் கடித்த அனைவருக்கும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் தற்போது நலமுடன் உள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார்.

The post தமிழகத்தில் தற்போது தினசரி 40-50 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்படுகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : dengue ,Tamil Nadu ,Chennai ,Minister ,MLA ,Subramaniam ,Ma. Subramanian ,
× RELATED “சென்னை உலா” என்ற (HOP ON HOP OFF – VINTAGE BUS Services)...