×

கத்தரிக்காய் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறை

*முன்னோடி விவசாயிகள் வழிகாட்டல்

தோகைமலை : கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் கத்தரிக்காய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கத்தரிக்காய் சாகுபடியில் அதிக மகசூல் பெற்று லாபம் பெறுவது குறித்து முன்னோடி விவசாயிகள் கடவூர் மோகன் மற்றும் தோகைமலை சின்னையன் ஆகியோர் தெரிவித்ததாவது:
கத்தரிக்காய் செடி வறட்சியை தாங்கி வளரும் பயிராகும். டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் தொடங்கி மே மாதம் வரை கத்தரி பயிரிடுவதற்கு நல்ல பருவமாகும்.

இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் அல்லது களிமண் கலந்த வண்டல் மண் அமைந்த நிலங்கள் ஏற்றதாகும். இதில் ஒரு எக்டேருக்கு (இரண்டரை ஏக்கர்)200 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும். இதில் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம் அல்லது டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் வீதம் கலக்க வேண்டும். மேலும் பாஸ்போபேக்டீரியா, அசோஸ்பைரில்லம் ஆகியவற்றை தலா 100 கிராம் வீதம் கலந்து நிழலில் அரைமணி நேரம் வைக்க வேண்டும். இதுபோல் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை உயரமான பாத்திகளில் 10 செ.மீ இடைவெளியில் அரை அங்குல ஆழத்திற்கு கோடுகள் இட்டு அதில் விதைகளை பரவலாக தூவ வேண்டும். விதைகளை விதைத்த பின்பு மணல் இட்டு மூடி உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

பொதுவாக கத்தரிக்காய் ரகத்தின் தன்மைகளுக்கு ஏற்ப இடைவெளி மற்றும் செடியின் எண்ணிக்கைகள் மாறுபடும்.ஒரு எக்டேருக்கு அடி உரமாக 50 கிலோ தழை சத்தும், 50 மணி சத்தும் 30 கிலோ சாம்பல் சத்து உள்ள உரத்தை 25 டன் தொழு உரத்துடன் 200 கிலோ பேப்பம் புண்ணாக்கு கலந்து இட வேண்டும். இதேபோல் நடவு செய்யும்போது 2 கிலோ அளவில் அசோஸ்பைரில்லம் இட வேண்டும். மேல் உரமாக 50 கிலோ தழை சத்து இட வேண்டும். கத்தரி நடவு செய்து 3ம் நாளில் உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து 7 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். மழை காலங்களில் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கத்தரி நாற்றுகளை நடுவதற்கு முன்பாக களைக்கொல்லி இடவேண்டும். மேலும் களைகள் முளைப்பதற்கு முன்பு 1 லிட்டர் அளவு உள்ள புளுகுளோரலின் என்ற களை கொல்லியை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து சீராகத் தெளிக்க வேண்டும். பின்பு கத்தரி நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். அதன் பிறகு மேல் உரம் இடுவதற்கு முன்பு களைகளை நீக்க வேண்டும். இதேபோல் மகசூலை அதிகரிக்க போராக்ஸ் 35 மில்லி கிராம் அல்லது ட்ரைக்கோடானால் 2, பிபிஎம் மற்றும் கோடியம் போரேட் இவற்றை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து நடவு செய்த 15 நாட்களுக்கு பிறகு ஒரு முறையும், பூக்கும் பருவத்திலும் தெளிக்க வேண்டும்.

மேலும் கத்தரி சாகுபடியின் போது பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதில் பூச்சி தாக்குதல் நோய் மற்றும் நாற்புழு தாக்குதல் அதிகமாக தோன்றுகிறது. இதில் ஹட்டா வண்டு வெளிர் காப்பி நிறமும் நடுவே பல கருப்பு புள்ளிகளும், புழு மஞ்சள் நிறத்தில் காணப்படும். முட்டைகள் சுருட்டு போன்று மஞ்சல் நிறமாகவும், கூட்டாகவும் தோன்றும். புழு மற்றும் வண்டுகள் இலைகளின் பச்சையத்தை தின்று இலையை நரம்புபோல் ஆக்குகிறது.

இதேபோல் அசுவினி என்பது இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் இலையின் சாறை உறிஞ்சி விடுகிறது. இதனால் செடிகள் மஞ்சள் நிறமாக மாறி உருக்குலைந்து காய்ந்து விடும். இவை தேன் துளிகளை செடியில் இடுவதால் கரும்பூசனம் படிந்து ஒளிச்சேர்க்கையை பாதிக்கிறது. தண்டு மற்றும் காய் துளைப்பான் என்பது ஆரம்பத்தில் இதன் புழு தண்டை துளையிட்டு வளரும் பகுதியை பாதிக்கும். காய்ந்து தொங்கும் கிளைகளே இதற்கு அறிகுறி ஆகும். பின்னர் புழு காய்களை துளையிட்டு காய்களை வீணாக்கும்.

கத்தரி நடவு செய்த 15 முதல் 20 நாட்களில் செடிகளின் குனித் தண்டுகள் இலையுடன் காய்ந்து தலை சாய்ந்து தொங்கி காணப்படும். இவைகளை கிள்ளி உள்ளே பாத்தால் வெள்ளை நிறப் புழு காணப்படும். இது காய்களை குடைந்து சாப்பிட்டு சேதப்படுத்துகிறது. ஆகவே இதனை கட்டுப்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட செடிகளின் நுனித்தண்டை கிள்ளி எறிந்துவிட வேண்டும். பாதிக்கப்பட்ட காய்களை பறித்து அழிக்க வேண்டும்.

இதேபோல் கோடைகால சாகுபடியில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனை கட்டுப்படுத்துவதற்கு ஒரு எக்டேருக்கு மஞ்சல் நிற ஒட்டும் பசை அட்டைப்பொறி 12 வைக்க வேண்டும். வேப்பெண்ணெய் 3 மில்லியுடன் 1 லிட்டர் நீர் கலந்து அதில் டீப்பால் என்ற ஒட்டும் திரவம் 1 மில்லியுடன் 1 லிட்டர் தண்ணீரில் கலக்கப்பட்ட கலவையுடன் சேர்த்து தெளிக்க வேண்டும். சாம்பல் மூக்கு வண்டுகளை கட்டுபடுத்துவதற்கு ஒரு எக்டேருக்கு கார்போஃபியூரான் 15 கிலோவை செடி நட்ட 15 நாட்களுக்கு பிறகு செடிகளின் வேர் பகுதியில் இட வேண்டும்.

ஆகவே மேற்படி முறைகளை பின்பற்றி விவசாயிகள் சாகுபடி செய்யதால் 50 முதல் 120 நாட்களுக்கு நல்ல மகசூலுடன் அறுவடை செய்யலாம். இதில் வீரிய ஒட்டு ரகத்தில் ஒரு எக்டேருக்கு 40 முதல் 50 டன்கள் வரை மகசூல் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post கத்தரிக்காய் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறை appeared first on Dinakaran.

Tags : Tokaimalai ,Kadavur ,Dinakaran ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு