×

பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு பொறியாளர் முட்டுக்கட்டை: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

பள்ளிப்பட்டு, நவ. 25: பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பேரூராட்சி பொறியாளர் வளர்ச்சி திட்டப் பணிகளை முடக்குவதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம், பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பேரூராட்சி துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் முருகவேல் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில், அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 18 பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து கூட்டத்தில் வரவு செலவு கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய கவுன்சிலர்கள் பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு மதிப்பீடு அறிக்கை தயார் செய்வது, பணிகள் ஆய்வு மேற்கொள்வதில், பேரூராட்சி பொறியாளர் மெத்தனமாக செயல்படுவதாகவும், இதனால் வளர்ச்சி திட்டப் பணிகள் முடங்குவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் அவசரகால பணிகளை மேற்கொள்ள செயல் அலுவலர் விரைந்து நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், மழைக்காலம் என்பதால் சுகாதாரம், தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் 15வது நிதிக்குழு மான்ய திட்டத்திலிருந்து ₹21 லட்சம் மதிப்பீட்டில் சாலை, குடிநீர், பைப்லைன் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு பொறியாளர் முட்டுக்கட்டை: கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Bodaturpet ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?