×

செல்போன் டவர் அமைப்பதாக கூறி கண்டாச்சிபுரம் வாலிபரிடம் லட்சக்கணக்கில் நூதன மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

விழுப்புரம், நவ. 25: விழுப்புரம் மாவட்டத்தில் செல்போன் டவர் அமைப்பதாக கூறி வாலிபரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் மோசடி செய்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே சித்தாத்தூரை சேர்ந்தவர் சிவபாலன்(39). கடந்த அக்டோபர் 6ம் தேதி செல்போன் டவர் அமைக்க இடம் தேவை எனவும், முன்பணமாக ரூ.40 லட்சமும், மாத வாடகை ரூ.45 ஆயிரம் வழங்கப்படும் என்று சிவபாலனின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் வந்தது. இதனை உண்மை என்று நம்பிய சிவபாலன் அதிலிருந்த நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
எதிர்முனையில் பேசிய நபர் நில விவரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டதன்பேரில் வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துள்ளார்.

தொடர்ந்து டவர் அமைக்க உங்கள் இடம் தேர்வாகியுள்ளதாகவும், முன்பணமாக ரூ.45 லட்சமும், மாதவாடகை ரூ. 45 ஆயிரம் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கான டாக்குமெண்ட் கட்டணம், ஜிஎஸ்டி, டவர் உதிரி பாகங்களுக்கான செலவு தொகை வழங்க வேண்டும் என்று கூறியதை தொடர்ந்து 10 தவணைகளில் ரூ.1,81,790 பணத்தை அவர்கூறிய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பின்னர் முன்பணம், வாடகை உள்ளிட்டவற்றை கேட்டபோது அந்த மர்ம ஆசாமி தரமறுத்துள்ளார். பின்னர்தான் அந்த ஆசாமி நூதன முறையில் பண மோசடி செய்தது சிவபாலனுக்கு தெரியவந்தது. இது குறித்து சிவபாலன் அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செல்போன் டவர் அமைப்பதாக கூறி கண்டாச்சிபுரம் வாலிபரிடம் லட்சக்கணக்கில் நூதன மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kandachipuram ,Villupuram ,
× RELATED 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள்...