×

ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்துக்கு கண்டனம்: தமுக்கடித்து நூதன போராட்டம்

 

திருச்சி.நவ.25: இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ள ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தை கண்டித்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று தமுக்கடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து சமய அறநிலைத்துறை நிதி ஒதுக்கீடு செய்த பின்னரும், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சேதமடைந்த கிழக்கு வாசல் கோபுரத்தை சரிசெய்யும் பணி கடந்த 6 மாதமாக நிறைவடையவில்லை. அதனால் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அப்பாதையை பயன்படுத்த முடியாத வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல கோயிலுக்கு பல இடங்களில் நிறைய சொத்துக்கள் இருக்கும் நிலையில் தினம்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் பெருமாளை தரிசிக்க வந்து செல்லும் வெளியூர் பக்தர்களுக்கு, வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய இடத்தை கோயில் நிர்வாகம் இதுவரை ஒதுக்கவில்லை. இதுபோன்ற குறைகளை சரி செய்யாத கோயில் நிர்வாகத்தை கண்டித்து, திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரம் அருகில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமுக்கடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் சந்துரு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் லெனின், மாவட்ட செயலாளர் சேதுபதி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். மேலும் நிர்வாகிகள் அருண், வெங்கடேஷ், மதுபாலன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

The post ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்துக்கு கண்டனம்: தமுக்கடித்து நூதன போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Srirangam temple ,Srirangam temple administration ,Hindu religious welfare department ,Indian Democratic ,Dinakaran ,
× RELATED மே 6ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு...