×

சர்வதேச சாதனை புரிந்த ஐசிஎப் முன்னாள் விளையாட்டு வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

சென்னை: ஓய்வு பெற்ற ஐ.சி.எப் முன்னாள் விளையாட்டு வீரர் சுப்பிரமணியத்தின் சர்வதேச சாதனைக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐ.சி.எப்.பில் இருந்து ஓய்வு பெற்ற 86 வயது விளையாட்டு வீரர் சுப்பிரமணியம் சமீபத்தில் பிலிப்பைன்சில் நடந்த ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் உயரம் தாண்டுதல், தூரம் தாண்டுதல், முத்தடுப்பு தாண்டுதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். அவரது சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் தனது எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில், “சென்னையைச் சேர்ந்த சுப்பிரமணியம் (86) பிலிப்பைன்சின் டர்லாக்கில் நடந்த 22வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் நான்கு தங்கப்பதக்கம் வென்றமைக்கு எனது உளம் நிறை நல்வாழ்த்துகள். 80 வயது தாண்டிய அவர் எவ்வளவு பெரிய போட்டிகளிலும், வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு இந்த மூத்த விளையாட்டு வீரரின் சாதனையை கண்டு பெருமை கொள்கிறது. இவரது வெற்றி வருங்காலங்களிலும் தொடரட்டும்” என்று பாராட்டு தெரிவித்துள்ளார். ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல்வேறு வயது கொண்ட குழுக்கள் பங்கேற்கும். அதில் சுப்பிரமணியன் 86 முதல் 90 வயது கொண்ட விளையாட்டு வீரர் குழுவில் பங்கேற்று சாதனையை புரிந்துள்ளார். ஐ.சி.எப்.பின் முதுநிலை பகுதிப் பணியாளராக 1996ல் ஓய்வு பெற்ற இவர் ஐ.சி.எப்.பின் இளம் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். அவரது மாணவர்கள் பலர் அகில இந்திய தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு வென்றுள்ளனர். சமீபத்தில் ஐ.சி.எப் பொதுமேலாளர் மல்லையாவை சந்தித்து வாழ்த்து பெற்ற அவரை, தடகளப் போட்டிகளில் பங்கேற்று வயது மாறுபாடின்றி வெல்ல விரும்புவோருக்கு ஒரு முன்மாதிரியாக சுப்பிரமணியம் விளங்குவதாக பாராட்டினார்.

The post சர்வதேச சாதனை புரிந்த ஐசிஎப் முன்னாள் விளையாட்டு வீரருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,ICF ,Chennai ,Sports Minister ,Udhayanidhi Stalin ,Subramaniam ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...