×

விஜய் ஹசாரே கோப்பை கோவா – தமிழ்நாடு மோதல்

தானே: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், தமிழ்நாடு தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று கோவா அணியை எதிர்கொள்கிறது. உள்நாட்டு கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் நாட்டின் 10 நகரங்களில் தொடங்கியது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்று உள்ள இந்த தொடரின் இ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு, இன்று தனது முதல் லீக் ஆட்டத்தில் களமிறங்குகிறது. இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள தமிழ்நாடு, மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளது.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணியில் விஜய் ஷங்கர், நடராஜன், வருண் சக்கரவர்த்தி என நட்சத்திர வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் சாய் சுதர்சன், சாய் கிஷோர், ஷாருக்கான், ஜெகதீசன், இந்தரஜித், அபராஜித், மணிமாறன் சித்தார்த் என திறமையான வீரர்கள் அணிவகுக்கின்றனர். தர்ஷன் மிசல் தலைமையிலான கோவா அணியில் ராகுல் திரிபாதி, கிருஷ்ணமூர்த்தி சித்தார்த், அர்ஜுன் டென்டுல்கர், லக்‌ஷயா கார்க், ஸ்னேகல் கவுதன்கர் என பெயர் சொல்லும் வீரர்களும் சாதிக்க காத்திருக்கின்றனர். அதனால் இன்றைய ஆட்டம் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் ஆட்டமாக இருக்கும்.

தமிழ்நாடு: தினேஷ் கார்த்திக் (கேப்டன்), பாபா இந்திரஜித், என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்கள்), சாய் சுதர்சன், பாபா அபராஜித், விஜய் ஷங்கர், ஷாருக்கான், வருண் சக்கரவர்த்தி, மணிமாறன் சித்தார்த், டி.நடராஜன், ரவி சாய்கிஷோர், சந்தீப் வாரியர், சோனு யாதவ், குல்தீப் சென், பிரதோஷ் ரஞ்சன் பால்.

கோவா: தர்ஷன் மிசல் (கேப்டன்), தீப்ராஜ் கோவனகர், ஸ்நேகல் கவுதன்கர், கிருஷ்ணமூர்த்தி சித்தார்த், ராகுல் திரிபாதி, இஷான் கெடேகர், மந்தன் குட்கர், ஹெரம்ப் பிராப், சுயேஷ்பிரபு தேசாய், விஜேஷ்பிரபு தேசாய், மோகித் ரெத்கர், அர்ஜுன் டென்டுல்கர், சமர் ஷரவன் துபாஷி, லக்‌ஷய் கார்க், விகாஷ் கன்வர் சிங், ஷுபம் தாரி.

* சவுராஷ்டிராவுடன் புதுச்சேரி பலப்பரீட்சை
ஏ பிரிவில் உள்ள புதுச்சேரி அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சவுராஷ்டிராவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் இன்று பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நடைபெற உள்ளது. புதுச்சேரி தனது முதல் லீக் ஆட்டத்தில் ரயில்வே அணியை 22 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

The post விஜய் ஹசாரே கோப்பை கோவா – தமிழ்நாடு மோதல் appeared first on Dinakaran.

Tags : Vijay Hazare Trophy Goa ,Tamil Nadu ,Vijay Hazare Cup ODI ,Goa ,Vijay Hazare Cup Goa ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...