×

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்பதில் தாமதம் துளையிடும் பணி 2வது நாளாக நிறுத்தம்: உறவினர்கள் வேதனை

உத்தர்காசி: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீண்டும் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் 2வது நாளாக துளையிடும் பணி நேற்று நிறுத்தப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வரும் 4.5 கிமீ சுரங்கப்பாதையின் ஒரு பகுதி கடந்த 12ம் தேதி திடீரென இடிந்ததில், உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். முதல் கட்டமாக, சுரங்க இடிபாடிபாடுகளில் 57 மீட்டர் தூரத்திற்கு துளையிட்டு 6 அங்குல குழாயை நுழைத்து அதன் மூலமாக தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

இதன் வழியாக கேமராவை அனுப்பி, தொழிலாளர்களின் உறவினர்களை பேச வைத்து அவர்கள் பத்திரமாக இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மீட்பு பணியில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலத்தை சேர்ந்த நிறுவனங்களின் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே, சுரங்கத்தில் கிடைமட்டமாக துளையிட்டு 45 மீட்டர் தூரத்திற்கு துளையிட்டு 800 மிமீ அகல குழாய் வெற்றிகரமாக உள்ளே செலுத்தப்பட்டது. இதனால் தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஒன்றிய சாலை போக்குவரத்து இணையமைச்சர் வி.கே. சிங், தேசிய பேரிடர் மீட்பு குழு இயக்குநர் ஜெனரல் அதுல் கர்வால் ஆகியோர் சுரங்கப்பகுதியை பார்வையிட்டனர்.
மறுபுறம், மீட்கப்படும் தொழிலாளர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுவினர் தயாராக உள்ளனர். மேலும், 41 படுக்கைகளுடன் தற்காலிக மருத்துவமனையும் தயார் செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மீட்பு பணியின்போது 45 மீட்டர் துளையிட்ட பிறகு அப்பகுதியில் கடினமான இரும்பு கம்பிகள் குறுக்கிட்டதால் துளையிடும் பணியில் 6 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. பின்னர், தேசிய பேரிடர் மீட்பு படையின் குழாய் வழியாக உள்ளே சென்று கேஸ் கட்டர்கள் மூலம் இரும்பு கம்பிகளை வெட்டி அகற்றிய பின்னர் துளையிடும் பணி மீண்டும் தொடங்கியது. இதனிடையே, மீட்பு பணியின் 13வது நாளான நேற்று இடிபாடுகளிடையே துளையிடும் பணி நடந்த போது, ஆகர் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு துளையிடும் பணி மீண்டும் தொடங்கியது. ஆனால், துளையிடும் பணி தொடங்கிய சிறிது நேரத்தில் ஆகர் துளையிடும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் துளையிடும் பணி நேற்று 2வது நாளாக தொடர்ந்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன், ‘‘மீட்பு பணி குறித்த நேரத்தை ஊடகங்கள் தயவுசெய்து கணித்து வெளியிட வேண்டாம். ஏனெனில் இதுவொரு மிகப் பெரிய எதிர்பார்ப்பை மக்களிடம் ஏற்படுத்தி விடுகிறது. தற்போது அடுத்த 5 மீட்டர் எவ்வித தடையுமின்றி துளையிடப்பட உள்ளது. மீட்பு பணி இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள். ஆனால் எப்போது என்று சொல்வதற்கில்லை. அது மீட்பு பணியில் தடை ஏற்படாமல் இருப்பதை பொருத்தது,’’ என்றார். இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு துளையிடும் பணி தொடங்குவதும் நிறுத்தப்படுவதுமாக இருப்பதால் தொழிலாளர்களை மீட்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டிருக்கும் செய்தி சுரங்கத்தினுள் சிக்கியுள்ள தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

* மீட்பு ஒத்திகை
தொழிலாளர்களை சக்கரம் பொருத்திய ஸ்ட்ரச்சரில் படுக்க வைத்து கயிறு மூலம் இழுத்து வெளியே மீட்டு கொண்டு வர திட்டமிடப்பட்டது. அதன்படி, தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று இதற்கான ஒத்திகையில் ஈடுபட்டனர்.

* குளிக்கும் வசதி
சிக்கியுள்ள தொழிலாளர் சுஷில் சர்மாவின் அண்ணன் ஹிரித்வார் சர்மாவை அதிகாரிகள் அவருடன் பேச வைத்தனர். பின்னர் பேசிய அவர், தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்கள் குளிக்க வசதி செய்து தரப்படுள்ளதாக தம்பி கூறியதாக தெரிவித்தார்.

The post உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்பதில் தாமதம் துளையிடும் பணி 2வது நாளாக நிறுத்தம்: உறவினர்கள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Uttarkashi ,Dinakaran ,
× RELATED உத்தரகாண்ட் தேசிய நெடுஞ்சாலை தப்ரானி...