×

722வது ஆண்டு கந்தூரி விழா கோலாகலம் முத்துப்பேட்டை சந்தனக்கூடு ஊர்வலத்தில் மதநல்லிணக்கம்: நாளை மறுநாள் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று அதிகாலை கோலாகலமாக நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்கா உலக பிரசித்தி பெற்ற தர்காவாகும். இந்த தர்காவிற்கு, திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த தர்காவில் ஆண்டுதோறும் பெரிய கந்தூரி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு 722வது கந்தூரி விழா கடந்த 14ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று அதிகாலை நடந்தது.

இதையொட்டி நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் டிரஸ்டிகள் இல்லத்திலிருந்து சந்தனங்கள் நிரப்பப்பட்ட குடங்களை தர்காவுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நள்ளிரவு சிறப்பு பிராத்தனை நடந்தது.
அதிகாலை 2.30 மணியளவில் டிரஸ்டிகள் புனித சந்தன குடங்களை தலையில் சுமந்து வந்து கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் வைத்தனர். பின்னர் அதிர்வேட்டுகள், வாணவேடிக்கைகளுடன் சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கியது. இந்த ஊர்வலம் அடக்கஸ்தலம், ஆற்றங்கரை பாவா தர்கா, அம்மா தர்காவிற்கு சென்று மீண்டும் தர்காவை மூன்று முறை சுற்றி வந்தடைந்தது. அப்போது அங்கு திரண்டிருந்தவர்கள் பூக்களை சந்தனக்கூடு மீது வீசி தங்களது வேண்டுதலை கேட்டு பிராத்தனை செய்தனர்.

பின்னர் அதிகாலை 5 மணிக்கு சந்தன கூட்டிலிருந்து சந்தன குடங்கள் தர்காவிற்கு எடுத்து வரப்பட்டு ஷேக்தாவூது ஆண்டவர் சமாதிக்கு புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதில், இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் மதநல்லிணக்கத்திற்க எடுத்துக்காட்டாக அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றனர். தொடர்ந்து மாலை உள்ளூர் மக்களுக்காக நடத்தப்பட்ட அந்திக்கூடு ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. வரும் 27ம்தேதி கொடி இறக்கத்துடன் கந்தூரி விழா நிறைவு பெறுகிறது.

The post 722வது ஆண்டு கந்தூரி விழா கோலாகலம் முத்துப்பேட்டை சந்தனக்கூடு ஊர்வலத்தில் மதநல்லிணக்கம்: நாளை மறுநாள் கொடி இறக்கத்துடன் விழா நிறைவு appeared first on Dinakaran.

Tags : 722nd Annual Ganduri Festival Kolagalam Muthupettai Sandalwood Procession ,Harmony ,Muthupet ,Sandalwood ,Tiruvarur District… ,722nd Annual Ganduri Festival Kolagalam Muthupettai Chandanakudu Procession Religious Harmony ,
× RELATED திண்டுக்கல்லில் மத நல்லிணக்க கந்தூரி விழா