×

திமுக மீது தவறான குற்றச்சாட்டு மாஜி டிஜிபி நட்ராஜ் மீது வழக்கு: ஜாமீனில் வெளியில் வர முடியாத 3 பிரிவுகளின் கீழ் பதிவு

திருச்சி: திமுக மீது தவறான குற்றச்சாட்டுக்களை கூறியதோடு, தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் அதை பகிர்ந்தும் வருவதால், முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது திருச்சி மாவட்ட போலீசார் ஜாமீனில் வெளியில் வர முடியாத வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக காவல்துறையில் சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை டிஜிபியாக பணியாற்றி 2011ல் ஓய்வு பெற்றவர் நட்ராஜ். அதன்பின்னர் அதிமுக ஆட்சியின்போது டிஎன்பிஎஸ்சியில் தலைவராகவும் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து மயிலாப்பூர் எம்எல்ஏவாகவும் இருந்தார். கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்நிலையில், அதிமுகவில் உறுப்பினராக பணியாற்றினாலும், தீவிர இந்துத்துவா கொள்கைகள் மீது கொண்ட பற்று காரணமாக திராவிட மாடல் குறித்து பல விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதில், பப்ளிக் டிபன்ஸ் பிராசிக்யூஷன் என்ற வாட்ஸ் குரூப்பில் நட்ராஜ் உள்ளார். அந்தக் குரூப்பில் இந்துக்கள் குறித்தும், ஓட்டு குறித்தும் முதல்வர் கூறாத கருத்தை அவர் கூறியதுபோல செய்தி தயார் செய்து, அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தையும் வைத்து பதிவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, இந்தக் கருத்துகள் குறித்து குரூப்பில் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. அப்போது திராவிட மாடலை ஒழிக்க வேண்டும் என்று கருத்து பதிவிட்டுள்ளதோடு, கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்துள்ளார்.

மேலும், கடந்த 2 ஆண்டுகளில் ஆயிரம் கோயில்கள் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று திமுக ஐடி விங்க் பிரமுகர் ஷீலா என்பவர், திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமாரிடம் புகார் செய்தார். இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153(A), 504, 505(1) (b), 505(1) (c), 505(2) ஐபிசி r/w 66 D IT Act (2008)-ன் படி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவாகும். நட்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

* முக்கிய நபர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு
நட்ராஜ் தவறான செய்தி பரப்பிய குரூப்பில் அட்மினாக வக்கீல் ராஜசேகர் உள்ளார். மேலும், அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன், நடிகர் பிரசாந்த், தரன் உள்பட பலர் உள்ளனர். இதனால் இந்தக் குரூப்பில் உள்ளவர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்தவும் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post திமுக மீது தவறான குற்றச்சாட்டு மாஜி டிஜிபி நட்ராஜ் மீது வழக்கு: ஜாமீனில் வெளியில் வர முடியாத 3 பிரிவுகளின் கீழ் பதிவு appeared first on Dinakaran.

Tags : DGP ,Natraj ,DMK ,Trichy ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...