×

கார்த்திகை தீப திருவிழாவின் உச்ச நிகழ்வு திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்:4,500 கிலோ நெய், தீபக்கொப்பரை தயார், 2,700 சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கம், 14 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தீபத்திருவிழா உற்சவத்தின் 10ம் நாள் விழாவை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வெகு விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் முக்கிய விழாவான மகாதீப பெருவிழா நாளை (26ம் தேதி) நடைபெற உள்ளது. அதையொட்டி, நாளை அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்படும்.

அதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படும். இதற்காக 4,500 கிலோ முதல்தர தூய நெய் ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மகாதீபம் ஏற்றுவதற்கான ஐந்தரை அடி உயரத்தில் செப்பினால் உருவான மகாதீப கொப்பரை புதிய வண்ணம் தீட்டப்பட்டு, அர்த்தநாரீஸ்வரர் திருவுருவத்துடன் தயார் நிலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. மகா தீபம் ஏற்றுவதற்காக 1,200 மீட்டர் துணி திரி, உபயதாரர்கள் மூலம் நேற்று அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், மகாதீப கொப்பரைக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மலை உச்சிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 200 கிலோ எடையுள்ள தீப கொப்பரையை, தோளில் சுமந்தபடி மலை உச்சிக்கு கொண்டு சேர்க்க உள்ளனர். அதைத்தொடர்ந்து, மலை உச்சியில் நிலை நிறுத்தப்படும் மகாதீப கொப்பரைக்கு பாரம்பரிய வழக்கப்படி, சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும். தீபத்திருவிழாவை தரிசிக்க இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், மகா தீபத்திருவிழா பாதுகாப்பு பணிகளை தமிழ்நாடு டிஜிபி சங்கர்ஜிவால் இன்று மாலை ஆய்வு செய்ய இருக்கிறார். 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில், மாடவீதிகள், கிரிவலப்பாைத மற்றும் நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 13 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இன்று முதல் வரும் 27ம் தேதி வரை செயல்படும். மேலும், 2,700 சிறப்பு பஸ்கள், 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோல், 120 சிறப்பு கமாண்டோ படை வீரர்கள், 24 தீயணைப்பு வாகனங்களுடன் 600 தீயணைப்பு வீரர்கள், 150 வனத்துறையினர் ஆகியோரும் அவசரகால மீட்புப்பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 57 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும், 85 இடங்களில் காவல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. திருக்கோயில், மாடவீதிகள், நகரின் முக்கிய வீதிகள் மற்றும் கிரிவலப்பாதையில் 623 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், பரணி மற்றும் மகா தீபம் தரிசனத்திற்கு 1,600 பேருக்கு கட்டண தரிசன டிக்கெட் ஆன்லைனில் வழங்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, பரணி தீப தரிசனத்துக்கு ரூ.500 கட்டணத்தில் 500 டிக்கெட்களும், மகா தீப தரிசனத்துக்கு ரூ.500 கட்டணத்தில் 1,000 டிக்கெட்களும், ரூ.600 கட்டணத்தில் 100 டிக்கெட்களும் முன்பதிவு செய்யும் வகையில், நேற்று காலை 10 மணிக்கு கோயில் இணையதளம் திறக்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் முயற்சித்ததால், நெட்வொர்க் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, முன்பதிவு ெதாடங்கிய ஒருமணி நேரத்துக்குள் அனைத்து டிக்கெட்களும் விற்றுத்தீர்ந்தன.

The post கார்த்திகை தீப திருவிழாவின் உச்ச நிகழ்வு திருவண்ணாமலையில் நாளை மகாதீபம்:4,500 கிலோ நெய், தீபக்கொப்பரை தயார், 2,700 சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கம், 14 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Mahadeepam ,Karthikai Deepa festival ,Tiruvannamalai ,Deepakopparai ,Thiruvannamalai ,Deepatri festival ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...