×

A-Z கடவுளின் அலங்காரப் பொருட்கள்!

நன்றி குங்குமம் தோழி

சென்னை மயிலாப்பூர் கோயில்களின் சங்கமம் என்று சொல்லலாம். காரணம், அங்கு கபாலீஸ்வரர் கோயில் மட்டுமில்லாமல் அனுமார், சாயிபாபா, வெள்ளீஸ்வரர் என பல கோயில்கள் அமைந்துள்ளன. கோயில்கள் நிறைந்த பகுதி என்பதாலே கோயில் சார்ந்த தொழிலை செய்து வருகிறார் கவுதம். இவர் சென்னை மயிலாப்பூரில் தெற்குமாட வீதியில் ‘அலங்காரகிரியா’ என்ற பெயரில் கடவுளுக்கான அலங்கார பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

‘‘என்னுடைய கடையில் கடவுளை அலங்கரிக்க தேவையான அனைத்து அலங்காரப் பொருட்களும் கிடைக்கும். நான் பிறந்து வளர்ந்தது படிச்சது எல்லாம் சென்னையில்தான். நாங்கள் பரம்பரை பரம்பரையாக தெய்வ சிலைகளுக்கு அலங்காரம் செய்து வரும் ‘அலங்காரபட்டர்’ குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஐந்து தலைமுறையாக இந்த தெய்வீக பணியை செய்து வருகிறோம். என்னுடைய தாத்தா சாரங்கபாணி பட்டாச்சாரியார், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில் விக்ரகங்களுக்கு அலங்காரம் செய்துள்ளார்.

அங்குள்ள கோயில்களில் அவரின் பெயரை சொன்னால் அங்குள்ள அனைத்து கோயில்களிலும் தெரியும். தாத்தாவைத் தொடர்ந்து அப்பா இந்த ேவலையினை செய்ய துவங்கினார். அவர் கடந்த 50 ஆண்டுகளாக, சென்னை அடையாறு பத்மநாபசுவாமி கோவில் மற்றும் முத்துமாரியம்மன் கோவில் என இருபத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் அலங்காரம் செய்து வருகிறார். நான் பொறியியல் பட்டதாரி என்றாலும், அப்பாவிற்கு துணையாக நானும் இந்த தொழிலில் ஈடுபட ஆரம்பிச்சேன்.

மேலும் இந்த காலக்கட்டத்திற்கு ஏற்ப தொழில் நுட்பங்களை எங்க தொழிலில் பயன்படுத்தினேன். அதன் அடிப்படையில் சிங்கப்பூரின் நன்கொடை வாரியம் எனக்கு அங்குள்ள கோயில்களில் இரண்டு வருடம் அலங்காரம் செய்யும் பணியினை அளித்தது. இரண்டு வருடம் கழித்து சென்னைக்கு வந்து மீண்டும் அப்பாவுடன் கடந்த 20 வருடமாக இணைந்து அலங்கார பணியில் ஈடுபட்டு வருகிறேன். சென்னையில் உள்ள கோயில்கள் மட்டுமில்லாமல், கர்நாடகாவில் உள்ள கோயில்களுக்கும் எங்களின் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

*அலங்காரகிரியா துவங்க காரணம்?

சுவாமிக்கான அலங்கார அயிட்டங்கள் வாங்க வேண்டும் என்றால் ஒவ்வொன்றுக்கும் ஒரு கடைக்கு போகணும். நகைக்கு ஒரு கடை, ஹாஸ்தம், பாதம் வாங்க பித்தளை கடை போகணும். வஸ்திரங்கள் வாங்க அதற்கான துணிக் கடைக்கு போகணும். கயிறு, குண்டூசி, சந்தனம் போன்ற தெய்வ சிலை அலங்காரப் பொருட்கள் வாங்க பல கடைகள் ஏறி இறங்கணும். அப்படி பல இடங்களுக்கு சென்று கஷ்டப்படாமல் ஒரே இடத்தில் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்ய விரும்பினோம். அதற்காக துவங்கப்பட்டதுதான் எங்களின் அலங்கார கடை. இங்கு தெய்வங்களை அலங்கரிக்க பல விதமான அனைத்துப் பொருட்களும் உள்ளன. சொல்லப்போனால் ஒரே இடத்தில் அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் ஒரே கடை
நம்முடையதுதான்.

*நீங்கள் மேற்கொள்ளும் தெய்வ பணிகள்?

வைகானச ஆகம விதியின் கீழ் ஒரு அடி முதல் நூறு அடி வரை தெய்வ சிலைகள் செய்கிறேன். மேலும் அந்த தெய்வ சிலைகளுக்கான அலங்காரங்களும் என் கடையில் உள்ளது. கோவில்களில் மூலவர் மற்றும் உற்சவருக்கான அலங்காரங்கள் செய்கிறேன். சிலர் உற்சவ மூர்த்திக்கு மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்வார்கள். நான் இரண்டு விக்ரகங்களுக்குமே அலங்காரங்கள் செய்வேன்.

அதனால் எனக்கு இந்த துறையில் ‘கௌரவ டாக்டர்’ மற்றும் ‘அலங்கார சக்ரவர்த்தி’ போன்ற பட்டங்கள் அளித்து கவுரவித்தார்கள். தெய்வீகப் பணியில் ஈடுபட்டு வருவதால், எனக்கு முழு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. என் துறை சார்ந்த பட்டப்படிப்பு படித்தவர்கள் எல்லோரும் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். ‘இதெல்லாம் ஒரு வேலையா? இதில் என்ன சம்பாத்தியம் கிடைக்கும்? உன்னுடைய திறமையை நீ வேஸ்ட் செய்திட்டே’ன்னு சொல்லி கிண்டல் செய்வாங்க. என்னால் ஒரு நாள் இருபது மணிநேரம் கூட சலிக்காமல் இறைப்பணி செய்ய முடியும். அது எனக்கு தெய்வம் அளித்திருக்கும் சக்தி. ஆனால் அவர்களால் குறிப்பிட்ட நேரம்தான் பணிபுரிய முடியும். அதே சமயம் என்னுடைய கடின உழைப்பிற்கான அங்கீகாரம் மற்றும் மரியாதை அவர்கள் செய்யும் வேலையில் கிடைக்காது.

*கடைகளில் கிடைக்கும் பொருட்கள்?

கடவுளின் சந்தன அலங்காரத்திற்கு தேவைப்படும் சந்தனம், சிலையில் அலங்காரத்திற்காக ஒட்டக்கூடிய பேப்பர்கள். பெயின்ட், பிரஷ், கண்ணுக்கு ஒட்டக்கூடிய நூல், டிசைனாக கட் செய்யும் கத்தரிக்கோல், வெண்ணை காப்பிற்கான ஊத்துக்குளி வெண்ணெய், ஜிகினா பவுடர்கள், குங்கும அலங்காரத்திற்கான பொருட்கள், பழ அலங்காரம் செய்ய தேவைப்படும் பொருட்கள் என அனைத்தும் இங்கு இருக்கிறது. உற்சவர் அலங்காரத்தில் ஹாஸ்தம், பாதம், பித்தளை கை, கால்களில் மூன்றுவிதமான டிசைன்கள் இங்கு கிடைக்கும்.

அதேபோல் கொலுசுகளிலும் வெரைட்டிகள் உள்ளன. பித்தளை, செம்புகளில் செய்யப்படும் முக அலங்காரமங்கள் மரத்திலான வாகனங்கள் என தெய்வத்திற்கு தேவையான அனைத்து அலங்காரப் பொருட்களும் இங்கு கிடைக்கும். சென்னை, கர்நாடகா மட்டுமில்லாமல் உலகமெங்கும் எங்களின் அலங்காரப் பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. தற்போது அமெரிக்காவில் உள்ள கோயில்களிலும் எங்க கடையில் இருந்து பொருட்களை ஆர்டர் செய்துள்ளனர். உலகமெங்கும் எங்களின் பொருட்களுக்கான மதிப்பு இருப்பதால், இதில் மேலும் பல புதிய டிசைன்களை வடிவமைக்க இருக்கிறேன்’’ என்றார் கவுதம்.

தொகுப்பு: விஜயா

The post A-Z கடவுளின் அலங்காரப் பொருட்கள்! appeared first on Dinakaran.

Tags : AZ ,Chennai ,Mylapore ,Kapaleeswarar temple ,Anumar ,God ,
× RELATED திடீரென டயர் வெடித்ததால் கல்லூரி...