×

கல்விக்கடனுக்கான மானியத்தொகையை உரிய நேரத்தில் வங்கிக்கு செலுத்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கல்விக்கடனுக்கான மானியத்தொகையை உரிய நேரத்தில் வங்கிக்கு செலுத்த வேண்டும் என ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த டாக்டர் வெங்கட்ராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்கிறார். அதில், 2012ம் ஆண்டில் மருத்துவம் படிக்க சீட் கிடைத்தது. 2014ம் ஆண்டில் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் 7 லட்சத்து 50 ஆயிரம் கல்வி கடன் பெற்றேன். படிப்பை முடித்து வேலை கிடைத்த 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை இந்த கடன் தொகைக்கான வட்டியை அரசாங்கமே வங்கிக்கு செலுத்திவிடும். 2019ம் ஆண்டில் எனக்கு வேலை கிடைத்தது.

தற்போது கல்வி கடனில் அசல் தொகையில் ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்தை செலுத்தி இருக்கிறேன். மீதம் வட்டியுடன் 5 லட்சத்து 19 ஆயிரத்து 311 ரூபாய் தான் உள்ளது. ஆனால் இன்னும் ரூபாய் 6 லட்சத்து 94 ஆயிரத்து 784 ஐ செலுத்தும்படி வங்கியினர் தெரிவிக்கின்றனர். விசாரித்தபோது 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வட்டி தொகையை உரிய நேரத்தில் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் செலுத்தாததால் அந்த வட்டி தொகையும் தங்களது கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறது என தெரிவிக்கின்றனர். இது சட்டவிரோதம்.

கல்வி கடன் விவகாரத்தில் உரிய நேரத்தில் வட்டி தொகையை செலுத்த ஒன்றிய அரசின் மனித வள மேம்பாட்டு துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், கல்வி கடன் தொகைக்கான வட்டி மானிய தொகையை மனித வள மேம்பாட்டு அமைச்சகம் செலுத்த தாமதித்ததால் அந்த வட்டி தொகையை மனுதாரரின் கடனுடன் வங்கி சேர்த்திருக்கிறது என வாதிட்டார். இதனை கேட்டுக்கொண்ட நீதிபதி, இதற்கு ஒன்றிய அரசு தான் காரணம் என்பதையும், நடைமுறை சிக்கல்களையும் ஒன்றிய அரசின் வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் கல்வி கடன் தொடர்பான பல வழக்குகளில், இதுபோன்ற சிரமங்களை வங்கிகள் எதிர்கொள்கின்றன என்று குறிப்பிட்ட நீதிபதி, தாமதமாக மானியத்தை செலுத்துவதால் மாணவர்களின் கல்விக்கடனுடன் வட்டியாக சேர்க்கப்படுவதாக வேதனை தெரிவித்தார். தொடர்ந்து, கல்விக்கடனுக்கான மானியத்தொகையை உரிய நேரத்தில் வங்கிக்கு செலுத்த வேண்டும் என ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

The post கல்விக்கடனுக்கான மானியத்தொகையை உரிய நேரத்தில் வங்கிக்கு செலுத்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ECtHR ,Union Govt. Madurai ,Madurai High Court ,Union Human Resource Development Ministry ,
× RELATED குற்றச் செயலில் ஈடுபடுவோர்...