![]()
சென்னை: உச்சநீதிமன்றத்தின் ஆணை, பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல; எல்லாப் பகுதி ஆளுநர்களுக்கும் பொருந்தக்கூடியதே என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் செயல்பாடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் வீணைக்கு வந்த போது, பஞ்சாப் ஆளுநர் நெருப்புடன் விளையாடுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஒரு ஆளுநர் எப்படி முடக்கி வைக்க முடியும்? ஆளுநருக்கு இதுபோல அதிகாரங்களை கொடுத்தது யார்? சட்டசபை கூட்டத் தொடர் முடிந்துவிட்டது என்பதாலேயே மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமாட்டேன் என்பது எப்படி சரியாகும்? என கடுமையாக சாடியது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் ஆணை, பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல; எல்லாப் பகுதி ஆளுநர்களுக்கும் பொருந்தக்கூடியதே என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார். அனைத்து மாநில ஆளுநர்களும் புரிந்து, இனியாவது அடக்கி வாசிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் பொறுமைக்கு இனிமேலும் சோதனை வரக்கூடாது. மசோதாக்களை திருப்பி அனுப்ப முடியுமே தவிர, நிறுத்தி வைக்க ஆளுநருக்கு வீட்டோ பவர் அரசமைப்பு சட்டப்படி கிடையாது. எதேச்சதிகார மனப்பான்மை ஆளுநர்களுக்கு எதிராக பஞ்சாப், கேரளா, தெலுங்கானா, தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆளுநர்கள் உரிய சட்டப்பூர்வமான அரசமைப்பு சட்டக் கடமைகளை நிறைவேற்றவேண்டும் என்பதற்காகவே வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் கருத்து, தெளிவுரை ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக ஆணி அடிப்பதுபோல உள்ளது. அரசமைப்பு சட்டத்தை ஆளுநர்கள் அவமதித்து திசை திருப்பும் திருகு தாள முறைக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கப்படும். உடனடியாக ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழியே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இல்லை என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
The post உச்சநீதிமன்றத்தின் கருத்து, தெளிவுரை ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக ஆணி அடிப்பதுபோல: கி.வீரமணி சாடல் appeared first on Dinakaran.
