×

722வது ஆண்டு கந்தூரி விழா: முத்துப்பேட்டை தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம்


முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் இன்று அதிகாலை கோலாகலமாக நடந்தது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடையில் உள்ள ஷேக்தாவூது ஆண்டவர் தர்கா உலக பிரசித்தி பெற்றது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் பெரிய கந்தூரி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு 722வது கந்தூரி விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (24ம் தேதி) அதிகாலை நடந்தது. இதையொட்டி நேற்று இரவு 10 மணியளவில் டிரஸ்டிகள் இல்லத்திலிருந்து சந்தனம் நிரப்பப்பட்ட குடங்களை தர்காவுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது.

அதிகாலை 2.30 மணியளவில் தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி சாகிப் தலைமையில் டிரஸ்டிகள் புனித சந்தன குடங்களை தலையில் சுமந்து வந்து கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் வைக்க அதிர்வேட்டுகள், வாணவேடிக்கைகளுடன் சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் அடக்கஸ்தலம், ஆற்றங்கரை பாவா தர்கா, அம்மா தர்காவிற்கு சென்று மீண்டும் தர்காவை மூன்று முறை சுற்றி வந்தடைந்தது. அப்போது அங்கு திரண்டிருந்தவர்கள் பூக்களை சந்தனக்கூடு மீது வீசினர். பின்னர் அதிகாலை 5 மணிக்கு சந்தன கூட்டிலிருந்து சந்தன குடங்கள் தர்காவிற்கு எடுத்து வரப்பட்டு ஷேக்தாவூது ஆண்டவர் சமாதிக்கு புனித சந்தனம் பூசப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வரும் 27ம் தேதி கொடி இறக்கத்துடன் கந்தூரி விழா நிறைவு பெறுகிறது. சந்தனக்கூடு ஊர்வலத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

The post 722வது ஆண்டு கந்தூரி விழா: முத்துப்பேட்டை தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : 722nd Annual Ganduri Festival: ,Sandalwood Procession ,Muthuppet Dargah ,Muthupet ,Sandalwood ,Muthupet dargah ,Shekdavudu ,Jambuvanoda, Muthupettai, Tiruvarur district… ,Muthupettai Darga ,
× RELATED நாகூர் தர்காவில் சந்தன கூடு ஊர்வலம்...